

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்.பி,க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 29-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இரு அவைகளிலும் நடந்தது. பட்ஜெட் மீதான விவாதங்களும் இரு அவைகளிலும் நடந்தன. முதல் அமர்வில் மக்களவை 99.5 சதவீதம் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டது என்றும், 50 மணி நேரம் கூட்டத்தொடரை நடத்தத் திட்டமிடப்பட்டதில் 49 மணி நேரம் 17நிமிடங்கள் கூட்டத்தொடர் நடந்தது என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இந்நிலையில் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது. கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு வழக்கம் போல் மாநிலங்களவை காலை நேர அமர்விலும், மக்களவை மாலையும் திட்டமிடப்பட்டு இருந்துது. அதுபோலவே மாநிலங்களவை இன்று காலை கூடியது. கருத்தடை திருத்த மசோதா உள்ளிட்டவை இன்று தாக்கல் செய்யப்பட இருந்தது.
அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையின் மைப்பகுதிக்கு சென்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் அமளி நிலவியது. காங்கிரஸ் எம்.பி,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.