மகாராஷ்டிர சட்டப்பேரவை இன்று கூடுகிறது; எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மகாராஷ்டிர சட்டப்பேரவை ஊழியர்கள், எம்எல்ஏக்கள் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து, இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சிகிச்சை பெறுபவர்களில் 74 சதவீதத்துக்கும் அதிகமானோர், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவுவதற்காக உயர்மட்ட பல்துறை பொது சுகாதாரக் குழுக்களை அம்மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கோவிட்-19 கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத் துறைகளுக்கு உதவுவதற்காக இக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட மாநிலங்களில் உள்ள பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர், தங்களது ஆலோசனைகளை தலைமை செயலாளர், சுகாதார செயலாளருக்கு வழங்குகின்றனர்.

இந்தநிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவை இன்று கூடுகிறது.அம்மாநில சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான அஜித் பவார் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இதையொட்டி கடந்த 2 நாட்களாக மகாராஷ்டிர சட்டப்பேரவை ஊழியர்கள், எம்எல்ஏக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 2,746- கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில், 36 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in