Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

வேளாண் சட்டங்களை திருத்த அரசு தயார்: அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உறுதி

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி உ.பி. கேட் பகுதியில் நேற்று நடந்த போராட்டத்தில் கேரள மாநிலத்தின் கலைஞர்கள் செண்டை மேளம் இசைத்தனர். பிகேயு விவசாய சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைத் அவர்களுடன் சேர்ந்து மேளம் இசைத்தார். படம்: பிடிஐ

புதுடெல்லி‘

‘விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, புதிய வேளாண் சட்டங்களை திருத்தியமைக்க அரசு தயார்’’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய விவசாய மாநாட்டில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதாவது:

விவசாயிகளின் நலனில் பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகள் வறுமையில் வாடுவதை தடுக்கவே புதியவேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. விவசாயத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், விளைப் பொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு சுதந்திரம் அளிக்கவுமே இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

ஆனால், தங்களுக்கு நன்மை செய்யும் இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருவது ஆச்சரியம் அளிக் கிறது. இப்போராட்டத்தால் விவ சாயிகளின் வாழ்வாதாரமும், ஒட்டுமொத்த வேளாண் பொருளா தாரமும் பாதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் தெரிந்திருந்தும், விவசாயிகள் மத்தியில் பொய்ப் பிரச்சாரங்களை பரப்பி அவர்களை போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் தூண்டி வருகின்றன.

கருத்து வேறுபாடு, எதிர்ப்பு ஆகியவற்றுக்கு ஜனநாயகத்தில் எப்போதும் இடம் உண்டு. ஆனால், நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எதிர்ப்பு இருக்க வேண்டுமா என்பதை விவசாயிகள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

புதிய வேளாண் சட்டங்களில் தவறு இருந்தால், சுட்டிக்காட்டுமாறு விவசாய சங்கங்களுக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது. எனினும், இதுவரை அவர்கள் ஒரு தவறினை கூட சுட்டிக்காட்டவில்லை.

வேளாண் சட்டங்களை திருத்தியமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு கூறுவதன் மூலம் இந்த சட்டங் களில் தவறு இருக்கிறது என அர்த்தம் கிடையாது. மாறாக, விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

இவ்வாறு தோமர் கூறினார்.

‘போராட்டம் தொடரும்'

இதனிடையே, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளின் (பிகேயு) டிராக்டர் பேரணியை பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைத் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “புதிய வேளாண் சட்டங்களை முற்றிலுமாக நீக்கும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும். நாளுக்கு நாள் எங்கள் போராட்டம் வலுபெறுமே தவிர பலவீனமாகாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x