ஏழைகள்தான் என்னுடைய நண்பர்கள்: பிரதமர் மோடி பேச்சு

கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய காட்சி: படம் |ஏஎன்ஐ.
கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய காட்சி: படம் |ஏஎன்ஐ.
Updated on
2 min read

ஏழைகள்தான் என்னுடைய நண்பர்கள். அவர்களுக்காகவே நான் பணியாற்றுகிறேன். அவர்களுக்காக அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் வசதியையும் வழங்கியுள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் இருகட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி கொல்கத்தாவில் இன்று தொடங்கி வைத்தார்.

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:

''என்னுடைய அரசியல் எதிரிகள் நான் என் நண்பர்களுக்காகப் பணியாற்றுகிறேன் என்று பேசுகிறார்கள். நாம் யாருடன் சேர்ந்து வளர்ந்தோமோ அவர்கள்தான் நமக்கு நண்பர்கள்.

நான் ஏழ்மையோடு சேர்ந்து வளர்ந்தேன். என்னால் ஏழை மக்களின் வாழ்க்கையையும், சிரமங்களையும் புரிந்துகொள்ள முடியும். நான் என்னுடைய ஏழை நண்பர்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன்.

கரோனா வைரஸ் பரவல் வந்தபோது, உலகமே மோசமான சிரமத்தில் இருந்தது. என்னுடைய ஏழை நண்பர்கள் பெரும் துன்பத்தில் இருந்தார்கள். கரோனா தொடங்கியபின், ஏழைகளுக்காக இலவசமான ரேஷன் பொருட்கள் வழங்கினேன். இலவசமாக கேஸ் சிலிண்டர்களை வழங்கினேன்.

கோடிக்கணக்கான பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினேன். கரோனா தடுப்பூசி உலகில் விலை அதிகமாக இருந்த நேரத்தில், நான் எனது ஏழை நண்பர்களுக்காக அரசு மருத்துவமனைகளில் இலவசமாகத் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்தேன்.

நான் மேற்கு வங்கத்தில் உள்ள என்னுடைய ஏழை நண்பர்களிடம் கேட்கிறேன். அவர்கள் என்னுடைய நட்பிற்கு ஆதரவு அளிக்கப் போகிறார்களா அல்லது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஊழலுக்கு ஆதரவு அளிக்கப் போகிறார்களா?

சகோதரிகளே, சகோதரர்களே! மம்தாவும், அவருடன் இருப்போரும் உங்களின் ஆரவாரத்தையும், உற்சாகத்தையும் பார்த்துத் தூக்கமில்லாமல் இருப்பார்கள். இதனால்தான் அவர்கள், ஆட்டம் தொடங்கிவிட்டது என்று பேசுகிறார்கள்.

திரிணமூல் காங்கிரஸின் விளையாட்டு முடிந்துவிட்டது. வளர்ச்சி தொடங்கிவிட்டது. அச்சமில்லாமல் பாஜகவுக்கு வாக்களியுங்கள். மோசமான நிர்வாகத்துக்கு எதிராக வாக்களியுங்கள். மம்தா கட்சியைச் சேர்ந்தவர்கள் அனுபவமானவர்கள், அதிகமாக விளையாடிவிட்டார்கள். ஏராளமான ஊழல் செய்து, மக்களிடம் இருந்து கொள்ளையடித்துவிட்டார்கள்.

அம்பான் புயலின்போது மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணத் தொகையைக் கூட கொள்ளையடித்து விட்டார்கள். மக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்துடனும், அவர்களின் வாழ்க்கையுடனும் விளையாடிவிட்டார்கள்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in