Last Updated : 07 Mar, 2021 12:03 PM

 

Published : 07 Mar 2021 12:03 PM
Last Updated : 07 Mar 2021 12:03 PM

மம்தா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கம் காஷ்மீராக மாறிவிடும்: சுவேந்து அதிகாரி காட்டம்

நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சுவேந்து அதிகாரி: படம் | ஏஎன்ஐ.

கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், இம்மாநிலம் காஷ்மீராக மாறிவிடும் என்று நந்திகிராம் தொகுதியின் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி காட்டமாக விமர்சித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் அரசில் கேபினட் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி பாஜகவில் சேர்ந்து மம்தாவைக் கடுமையாக எதிர்த்து வருகிறார். மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

வழக்கமாக பவானிபூரில்தான் மம்தா பானர்ஜி போட்டியிடுவார். ஆனால், சுவேந்து அதிகாரியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் மம்தா பானர்ஜி தொகுதியை இந்த முறை மாற்றியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடக்கும் 294 தொகுதிகளில் 291 வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. வரும் 27-ம் தேதி முதல்கட்டத் தேர்தலும், ஏப்ரல் 1-ம் தேதி 2-வது கட்டத் தேர்தலும் நடக்கிறது. இரு கட்டங்களிலும் 60 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. இதில் 57 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

இதில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

பெஹாலியா நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் சுவேந்து அதிகாரி பேசியதாவது:

''இன்றைய சூழலில் ஷியாமா பிரசாத் முகர்ஜி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த தேசம் முஸ்லிம் தேசமாக மாறியிருக்கும். நாமெல்லாம் வங்க தேசத்தில் வாழ்ந்திருப்போம். மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கம் காஷ்மீராக மாறிவிடும்

நந்திகிராம் எனக்குப் பெரிய சவால் இல்லை. நான் நந்திகிராம் தொகுதியில் நிச்சயம் மம்தா பானர்ஜியை வீழ்த்தப் போகிறேன். மீண்டும் அவரைக் கொல்கத்தாவுக்கு அனுப்பப் போகிறேன். எனக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த பாஜக தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். நந்திகிராம் தொகுதியில் தாமரை மலர நான் பணிபுரிவேன். மாநிலம் முழுவதும் தாமரை மலரத் துணைபுரிவேன். நந்திகிராம் மட்டுமல்ல, மாநிலத்தில் தோல்வியை மம்தா பானர்ஜி சந்திக்கப் போகிறார். நந்திகிராமில் மட்டும் மம்தா 50 ஆயிரம் வாக்குகளில் தோற்பார்.

நந்திகிராமில் மம்தா பானர்ஜியை நான் தோற்கடிப்பேன் என 200 சதவீதம் உறுதியாகக் கூறுகிறேன். எதற்காக பவானிபூர் தொகுதியிலிருந்து மம்தா ஓடி வந்துள்ளார், என்ன காரணத்துக்காக பவானிபூரிலிருந்து மம்தா நந்திகிராம் வந்துள்ளார். காரணத்தை நான் கூறுகிறேன். 2019-ம் ஆண்டு மக்களவைத் தொகுதியில், மித்ரா பகுதியில் பாஜக வென்றது. உங்கள் சொந்தத் தொகுதியில்கூட உங்களால் வெல்ல முடியாது.

நந்திகிராமின் மண்ணின் மைந்தர் நான்தான். வெளியிலிருந்து வந்தவர் மம்தா பானர்ஜி என்பதை மக்கள் உணர வேண்டும்''.

இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x