Last Updated : 07 Mar, 2021 11:35 AM

 

Published : 07 Mar 2021 11:35 AM
Last Updated : 07 Mar 2021 11:35 AM

பாஜகவுக்காக அமலாக்கப் பிரிவும், சுங்கத்துறையும் கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன: பினராயி விஜயன் தாக்கு

கேரள முதல்வர் பினராயி விஜயன்: கோப்புப் படம்.

திருவனந்தபுரம்

கேரளாவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்காக அமலாக்கப் பிரிவு, சுங்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக போட்டியிட்டாலும் பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே கேரள தங்கம் கடத்தல் வழக்கு, டாலர் கடத்தல் வழக்கில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சுங்கத்துறையினர், அமலாக்கப் பிரிவினரை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று கேரள அரசு குற்றம் சாட்டி வருகிறது.

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து மத்திய அரசின் சில விசாரணை அமைப்புகள் ஆவேசமாக தேர்தல் பிரச்சாரத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன. சமீபத்திய உதாரணம் என்பது கேரள உள்கட்டமைப்பு முதலீடு நிதி வாரியத்துக்கு எதிராக அமலாக்கப் பிரிவும், சுங்கத்துறையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையாகும்.

அதிலும் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவுக்காக தீவிரமாக சுங்கத்துறைதான் பிரச்சாரம் செய்து முன்னணியில் இருக்கிறது. சுங்கத்துறையின் ஆணையர், நேரடியாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம்தான் இதற்கு சாட்சி.

டாலர் கடத்தல், தங்கம் கடத்தல் வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த சுங்கத்துறை ஆணையர், அந்த வழக்கோடு தொடர்புடையவர் அல்ல. பிரிவு 164ன் கீழ் வாக்குமூலம் என்பது மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணை அதிகாரி, விசாரணையின்போது பெறுவதாகும். தனிநபர் ஒருவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அளித்த வாக்குமூலத்தை வெளியிடக் கூடாது என்று விசாரணை அமைப்புக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்பில்லாத சுங்கத்துறை ஆணையர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை அவமானப்படுத்தும் நோக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்தியில் ஆளும் கட்சியைப் பாதுக்காக்கும் நோக்கில், அரசியல் நோக்கத்துடன் சுஙகத்துறை செயல்படுகிறது. தங்கம் கடத்தல் வழக்கில் இருந்து, காங்கிரஸ், பாஜகவுடன் இணைந்து ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அவமானப்படுத்த முயல்கிறது.

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சில விஷயங்கள் குறித்துப் பேசியதை அறிந்தேன். மத்திய கிழக்கு நாடுகளுக்கு வி.முரளிதரன்தான் பொறுப்பாக இருந்து வருகிறார். அவர் வெளியுறவுத்துறை இணையமைச்சராகப் பொறுப்பு ஏற்றபின், எத்தனை கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது என்று கூற முடியுமா? முரளிதரன் அமைச்சராகப் பொறுப்பேற்றபின், தூதரகம் வழியாக தங்கம் கடத்தப்படவே இல்லையா? தூதரகம் வழியாக தங்கம் கடத்தப்படவில்லை என்று கூறிய குற்றம் சாட்டப்பட்ட நபருடன் அமைச்சருக்குத் தொடர்பில்லையா?

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த அறிக்கையில் தூதரகம் வழியாக தங்கம் கடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய வெளியுறவு இணையமைச்சர் அதற்கு எதிராக ஏன் பேசுகிறார். இந்த அமைச்சர்தான் சுங்கத்துறையைப் பயன்படுத்தி, மாநில அரசுக்கு எதிராகச் செயல்பட வைக்கிறார்''.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x