

டெல்லியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 125 ஆவது பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமை உரையாற்றினார். அதில், பிரதமர் நரேந்தர மோடி மற்றும் சங்பரிவாரின் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக தாக்கிப் பேசினார்.
தனது உரையில் சோனியா காந்தி இன்று (சனிக்கிழமை) பேசியதாவது:
நேரு போன்ற தலைவர்கள் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தபோதும் சிறைவாசம் அனுபவித்த போதும் இன்றைய ஆட்சியாளர்களின் தத்துவார்த்த ஆசான்கள் அவர்களது வீடுகளில் பத்திரமாக ஒளிந்துகொண்டிருந்தனர், அவர்களில் சிலர் பிரிட்டிஷ் எஜமானர்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு கண்டண ஊர்வலம் சென்றதில்லை, கண்டண தீர்மானம் கூட நிறைவேற்றியதில்லை.
1942 ஆம் ஆண்டு காந்திஜி ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் அறிவித்தபோது இரண்டு குழுக்கள் அதை எதிர்த்தன. அதில் ஒன்றுதான் நாட்டின் பிரிவினைக்கு காரணமாயிற்று, மற்றொன்றுதான் தற்போதைய ஆட்சிக்கு ‘ரிமோட் கண்ட்ரோலாக’ உள்ளது. கடந்த காலத்தை மறைக்க இந்த அரசு எவ்வளவு முயன்றாலும் அதுதான் வ்ரலாற்று உண்மையாகும்.
மதச்சாற்பற்ற மாண்புகளை எவராவது எதிர்த்தாலோ அல்லது நாட்டின் மதச்சார்பின்மைக்கு ஆபத்தை விளைவித்தாலோ அவர்கள் நேருவின் கொள்கைகளை மட்டுமல்லாமல், மகாத்மா காந்தி உட்பட நாட்டின் விடுதலைக்கு போராடிய தலைவர்கள் அனைவரின் கொள்கைகளையும் லட்சியங்களையும் எதிர்க்கிறார்கள்.
தன்னுடைய கருத்துக்கு மாறாக கருத்து கொண்டவர்களையும், தன்னை விமர்சித்தவர்கள் மீதும் நேரு மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். மக்கள் சுதந்திரமாக சிந்திக்கவும், நடந்துகொள்ளவும், வணங்கவும் உரிமை கொண்டவர்களாவர்.
ஜனநாயகம் என்பது விவாத மேடையில் உள்ளது; தங்களுடைய எண்ணங்களை வெளிப்படையாக பரிமாறிக்கொளவதில் உள்ளது என்று நேரு உறுதியாக நம்பியதுடன் அம்முறையில் நாட்டை வளர்த்தெடுத்தார். தனது கருத்துக்கு மாற்றாக யாராவது பேசினால் அவரை துரோகி என்று முத்திரை குத்தக்கூடாது. அது ஜனநாயகமும் இல்லை, தேசபக்தியும் இல்லை. அப்படிப் பேசுவது சர்வாதிகாரத்தின் ஒரு வடிவமாகும். இன்று நிலவும் சகிப்பினமையைக் காணும்போது நாம் நேருவின் காலத்தை நினைத்துப்பார்க்கிறோம்.
இன்று நாம் சிலர் வளர்ச்சி என்ற முகமூடிக்குப் பின் மறைந்துகொண்டு தங்களது மதவாத செயல்திட்டத்தை உலகிடமிருந்து மறைக்க முயலுவதைக் காண்கிறோம். வளர்ச்சி என்று மீண்டும் மீண்டும் பேசும் இவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட நேருவின் பாரம்பரியத்தில் இருந்து கற்கத் தவறுகின்றனர்.
‘நவீன இந்தியாவின் கோவில்கள்’ என்று நேரு அணைகளைக் கட்டினார். இந்தியாவில் தொழிற்சாலைகளையும், மில்களையும் ஏற்படுத்தினார். ஆராய்ச்சி அமைப்புகளை ஏற்படுத்தி அறிவியல் கண்ணோட்டத்தை ஊக்குவித்தார். கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் ஏற்படுத்தி கல்வியை வளர்த்தார். இவற்றால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். நேருவைப் பொறுத்தமட்டில் தேசத்தின் வளர்ச்சி என்பது குடிமக்களின் வளர்ச்சியும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தலும் ஆகும்.
இன்று சிலர் ‘வளர்ச்சியின்’ விளக்கத்தையே மாற்றிவிட்டனர், அவர்களுக்கு வளர்ச்சி என்பது ஏழை விவசாயிகளிடமிருந்து நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதும், ஏழைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பயன்களைக் குறைப்பதும் ஆகும். அவர்களுக்கு வளர்ச்சி என்பது ஒரு சில குறிப்பிட்ட தொழிலதிபர்கள், வணிகர்களுக்கு மட்டுமே ஆகும்.
நேரு கலை, கலாச்சார மையங்கள், வரலாறு மற்றும் அறிவியல் நிறுவனங்கள் போன்ற பல அமைப்புகளை ஏற்படுத்தினார். கலை மற்றும் மனிதநேய மதிப்பீடுகளை வளர்த்தெடுத்தல், ஆராய்ச்சி மேற்கொண்டு அறிவியல் உணர்வைப் பரவலாக்குதல், நமது கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை பேணிப் பாதுகாத்தல் ஆகிய குறிக்கோள்களுடன் இவற்றை நிர்மாணித்தார். ஆனால் இன்று இந்த அமைப்புகள் கேலிக்கூத்தாக்கப்பட்டு விட்டன.
அரசால் பாராட்டப்பட்ட பல எழுத்தாளர்களும் அறிஞர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தங்களது விருதுகளைத் திருப்பி அளித்து வருகின்றனர். சாகித்ய அகாடமியின் முதல் தலைவரே நேருஜிதான். அவர் தனது தொடக்கவுரையிலேயே ‘இந்த அகாடமியை பிரதமரின் குறுக்கீட்டிலிருந்து பாதுகாப்பதுதான் தனது முதல் கடமை’ என்று கூறினார்.
ஆனால், இந்த அகாடமியையும், இதர மையங்களையும் அமைப்புகளையின் இன்று யார் பாதுகாப்பார்கள்? பணவீக்கம் மற்றும் வன்முறை ஆகிய இரண்டு ஆபத்துகளிலிருந்தும் சாதாரண மக்களைக் காப்பாற்ற வக்கற்ற அரசால் இந்த அர்த்தமுள்ள அமைப்புகளை எப்படிக் காப்பாற்ற முடியும்?
பொதுமக்கள் எதைச் சாப்பிடவேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று வேகமாக நினைவூட்டும் ஆளுங்கட்சியினருக்கு கிலோ ரூ.200க்கு பருப்பு வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அந்த மக்களுக்கு அறிவுரை கூற எதுவுமில்லை. இன்று வானத்தில் சில மேகங்கள் இருக்கலாம். ஆனால், அந்த மேகங்கள் விரைவில் மறையும் கதிரவனின் பிரகாசமான கதிர்கள் மீண்டும் ஒளியூட்டும்.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.