Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

டெல்லியில் 100-வது நாளை எட்டிய போராட்டம்; நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள்: போக்குவரத்து ஸ்தம்பிப்பு

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 100-வதுநாளை எட்டியது.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லை பகுதி களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு நடத்திய பல சுற்று பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் நேற்று 100-வது நாளைநேற்று எட்டியது

இதனைக் குறிக்கும் விதமாக, டெல்லியில் உள்ள மேற்கு பெர்ரிபெரல் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே டெல்லியில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக, பஞ்சாப், ஹரியாணா மாநிலங் களில் இருந்தும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இந்தப்போராட்டத்தால் சுமார் 135 கி.மீ.நீளம் உள்ள அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

முன்னதாக, செய்தியாளர் களிடம் பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைத் கூறுகையில், “புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் இந்த மறியல் நடைபெறுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வேளாண் சட்டங்களை முற்றிலுமாக நீக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். எத்தனை நாட்கள்கடந்தாலும், அது பற்றி எங்களுக்குகவலை இல்லை. வேளாண் சட் டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை டெல்லியில் இருந்து செல்ல மாட்டோம்" என்றார்.

காங்கிரஸ் விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

நூறு நாட்களை கடந்திருப்பது விவசாயிகளின் போராட்டம் மட்டுமல்ல; மத்திய பாஜக அரசின் ஆணவமும்தான். விவசாயிகளின் போராட்டத்தை களங்கப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. விவசாயிகளை அவமானப்படுத்த தங்களுக்கு சாதகமான ஊடகங்களை அரசு பயன்படுத்துகிறது. ஆனால்,மத்திய அரசின் இந்த நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து 100 நாட்களை விவசாயிகளின் போராட்டம் கடந்திருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய வெற்றிதான். விவசாயிகளின் இப்போராட் டமானது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு சரித்திரமாக பதிவு செய்யப்படும். இவ்வாறு பவன் கேரா கூறினார்.

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நாட்டுக்காக எல்லையில் போராடும் ராணுவ வீரர்களின் தந்தைகளை (விவசாயிகள்) சாலைகளில் ஆணிகளை பதித்து மத்திய அரசு கவுரவித்து வருகிறது" என்றுகடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x