

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மாண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 113 அடியாக உயர்ந்துள்ளது. நீண்ட காலத்துக்கு பிறகு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் தலைக் காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தால் ஹேமாவதி, ஹாரங்கி அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மாண்டியா மாவட்டத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட் டுள்ள மிகப்பெரிய அணையான கிருஷ்ணராஜ சாகருக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 124.80 அடி (49 டிஎம்சி) மொத்த கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 5 மணிக்கு 113.16 அடியை எட்டியது. மேலும் அணைக்கு நொடிக்கு 6 ஆயிரத்து 508 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து நொடிக்கு 3,825 கனஅடி நீர் கால்வாய்களில் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3 ஆயிரம் கன அடிநீர் பிலிகுண்டுலு வழியாக தமிழகத்துக்கு செல்கிறது.
இது தொடர்பாக காவிரி நீர் நிர்வாக வாரிய அதிகாரிகள் கூறும்போது,
“கிருஷ்ணராஜ சாகர் அணை கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்கிறது. நிகழாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை பொய்த்ததால், அணை நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டது.
வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் முழு கொள்ளளவை எட்டும் கிருஷ்ணராஜ சாகர் அணை, நிகழாண்டில் நவம்பர் மாதம் ஆன பிறகும் முழு கொள்ளளவை எட்டவில்லை. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் 113.16 அடியாக உயர்ந்துள்ளது. இதே அளவில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்தால் இன்னும் ஓரிரு வாரங் களில் அணை முழு கொள்ளளவை எட்டும். அப்போது தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர் முழுமையாக திறந்துவிடப்படும்'' என்றனர்.
கிருஷ்ணராஜ சாகர் அணை யின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவதால் மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்ட விவசாயி களும், தமிழக விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.