

புனேவில் இஸ்லாமிய தொழில்நுட்ப பணியாளர் இந்து அமைப்பினரால் கொல்லப்பட்டது குறித்து மாநில காவல்துறை வழங்கிய ஆய்வு அறிக்கை தெளிவானதாக இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதனை நிராகரித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த வாரம், ஃபேஸ்புக்கில் மராட்டிய மன்னர் சிவாஜி மற்றும் மறைந்த சிவசேனை தலைவர் பால் தாக்கரேவை இழிவுப்படுத்தும் விதமான சில புகைப்படங்கள் பகிரப்பட்டதை அடுத்து, புனே உள்ளிட்ட பல இடங்களில் சிவசேனையின் கிளை அமைப்புகள் போராட்டம் மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக அங்கு வன்முறை ஏவப்பட்டது. இந்த நிலையில் ராஷ்ட்ரீய அமைப்பினர் சிலர் மொசின் ஷேக் (வயது 24) என்ற தொழில்நுட்ப பணியாளரை ஹாக்கி பேட்களால் அடித்துத் தாக்கி, கொலை செய்தனர்.
இந்த கொலைச் சம்பவம் காரணமாக ராஷ்ட்ரீய அமைப்பை சேர்ந்ததாக கருதப்படும் 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் இழிவுபடுத்தும் படங்களை வெளியிட்டு, கலவரத்தை தூண்டி வகுப்புவாதத்தை ஏற்படுத்தியதாக 180 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல இடங்களில் இஸ்லாமியர்களை குறி வைத்து அங்கு தாக்குதல் நடந்தேரியதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், புனே தொழில்நுட்ப பணியாளர் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக மாநில காவல்துறையை ஆய்வு அறிக்கை அளிக்கும்படி கேட்டுக்கொண்டது.
அதன்படி, மாநில அரசும், அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையில் போதிய தெளிவான விபரங்கள் இல்லை என்றும், இது தங்களுக்கு அதிர்ப்தியளிப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக விரிவான விளக்கம் வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.
மேலும், மொசின் ஷேக் குடும்த்தினருக்கு, மாநில அரசு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்றும், நாட்டில் எங்கு வகுப்புவாத வன்முறை நடந்தாலும் அதற்கு மாநில அரசு முழு பொறுப்பாகும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.