Published : 06 Mar 2021 07:08 PM
Last Updated : 06 Mar 2021 07:08 PM

‘முன்னாள் தோழர் இன்னாள் எதிரி’ - மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டி: பாஜக அறிவிப்பு

கொல்கத்தா

மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள பாஜக, நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்தமுறை 291 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா(ஜிஜேஎம்) கட்சிக்கு 3 இடங்களையும் ஒதுக்கியுள்ளது.

முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது பவானிபூரில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார், கடந்த 2 முறையும் அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராம் தொகுதியிலிருந்து போட்டியிட உள்ளார். இதனை திரிணமூல் காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்தநிலையில் மேற்குவங்க தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. மத்திய தேர்தல் கமிட்டிக் கூட்டத்திற்கு பிறகு பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் பட்டியலை வெளியிட்டார். இதில் சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவேந்து அதிகாரி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் இரண்டாம் கட்ட தலைவராக இருந்தவர். அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

நந்திகிராமில் சுவேந்து அதிகாரிக்கான செல்வாக்கு வலுவானது . நந்திகிராமில் கடந்த 2007ல் ரசாயன ஆலைக்கு எதிரான நந்திகிராம் போராட்டத்தை முன்னெடுத்தவர் சுவேந்து அதிகாரி.

இதனால், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு சுவேந்து அதிகாரி கடும் சவாலாக இருப்பார் எனத் தெரிகிறது. இதனைத் தவிர வேறு சில முக்கிய வேட்பாளர்களும் முதல்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x