Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

தள்ளாத வயதிலும் உழைத்து வாழ்ந்த 98 வயது முதியவருக்கு உ.பி. அரசு கவுரவம்

தள்ளாத வயதிலும் உழைத்து வாழ்ந்த 98 வயது முதியவரை உ.பி. அரசு கவுரவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தை சேர்ந்த 98 வயது முதியவர் விஜய் பால் சிங். இவர் தங்கள் பகுதியில் ‘சன்னா’ (வேகவைத்த பட்டாணி) விற்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலானது.

இந்த வயதிலும் உடலை வருத்திக்கொள்ள வேண்டுமா என வாடிக்கையாளர் ஒருவர் அவரிடம் பரிவுடன் கேட்க, வீட்டில் அமர்ந்திருப்பதை பலவீனமாக உணர்வதாகவும் அதனால் அதில் தனக்கு விருப்பமில்லை எனவும் விஜய் பால் சிங் கூறுகிறார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, தள்ளதாத வயதிலும் யாரையும் சார்ந்து வாழ விரும்பாத அவரது உறுதி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து ரேபரேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முதியவர் விஜய் பால் சிங் நேற்று முன்தினம் அழைக்கப்பட்டார். அவருக்கு ரூ.11,000 ரொக்கம், ஊன்றுகோல், சால்வை மற்றும் சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சியர் வைபவ் ஸ்ரீவஸ்தவா கவுரவித்தார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, “முதியவருக்கு அரசுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடு உள்ளது. அவருக்கு ரேஷன் அட்டையும் வீட்டில் கழிப்பறை கட்ட நிதியும் அளித்துள்ளோம். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் வழங்கும்.

கட்டாயத்தால் அவர் இத்தொழில் செய்யவில்லை. யாரையும் சார்ந்திருக்க விரும்பாததால் இதனை செய்துவந்துள்ளார். எங்களுக்கெல்லாம் அவர் உந்துசக்தியாக திகழ்கிறார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x