Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

விவசாயிகள் போராட்டம் 100-வது நாளாக நீடிப்பு - டெல்லி முக்கிய சாலைகளில் இன்று மறியல்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 100-வது நாளை எட்டியிருக்கிறது. இதனைக் குறிக்கும் விதமாக, டெல்லியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் 5 மணிநேர மறியலில் ஈடுபடவுள்ளனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக கூறி, மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. ஆனால், இச்சட்டங்கள் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

மேலும், இச்சட்டங்களை நீக்க வலியுறுத்தி கடந்த நவம்பர் 26-ம் தேதி முதலாக பஞ்சாப், ஹரியாணா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமலும், உடல்நலக்குறைவாலும் உயிரிழந்தனர்.

இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இந்தப் பின்னணியில், கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தை அடுத்து, விவசாயசங்கங்கள் - மத்திய அரசு இடையேஇதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இருந்தபோதிலும், டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 100-வது நாளை எட்டியிருக்கிறது. இதனைக் குறிக்கும் விதமாகவும், தங்கள்நிலைப்பாட்டில் இருந்து விவசாயிகள் பின்வாங்கவில்லை என்பதை அரசுக்குஉணர்த்தும் விதமாகவும் டெல்லியில் உள்ள மேற்கு பெர்ரிபெரல் நெடுஞ்சாலையில் 5 மணி நேர மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x