1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

நாடு முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இன்று காலை 7 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு (1,80,05,503) இது வரை கோவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இதில் 68,53,083 சுகாதாரப் பணியாளர்கள் (முதல் முறை), 31,41,371 சுகாதாரப் பணியாளர்கள் (இரண்டாம் முறை), 60,90,931 முன்களப் பணியாளர்கள் (முதல் முறை), மற்றும் 67,297 முன்களப் பணியாளர்கள் (இரண்டாம் முறை) அடங்குவர்.

45 வயதுக்கு அதிகமான இணை நோய்த்தன்மை உள்ளவர்கள் 2,35,901 பேருக்கும், 60 வயதுக்கு அதிகமான 16,16,920 பயனாளிகளுக்கும் இது வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து வழங்கலின் 48-வது நாளான நேற்று (மார்ச் 4) ஒரு நாளில் மட்டும் சுமார் 14 லட்சம் (13,88,170) தடுப்பூசிகள் நாடு முழுவதும் போடப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

16,081 அமர்வுகளில் 10,56,808 பயனாளிகளுக்கு (சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள்) முதல் டோஸ் தடுப்பூசியும், 3,31,362 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டன.

இதற்கிடையே, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் தில்லி ஆகிய ஆறு மாநிலங்களில் புதிய கரோனா பாதிப்புகள் அதிகளவில் பதிவாகி இருக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான பாதிப்புகளில் 84.44 சதவீதம் (16,838) மேற்கண்ட இடங்களில் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிராவில் நாட்டிலேயே அதிக அளவாக 8,998 பாதிப்புகளும், கேரளாவில் 2,616 புதிய தொற்றுகளும், பஞ்சாபில் 1,0871 பாதிப்புகளும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளன. எட்டு மாநிலங்களில் பாதிப்புகளின் அளவு அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் தற்போதைய மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,76,319 ஆக இன்று உள்ளது. இதுவரை உறுதி படுத்தப்பட்ட தொற்றுகளில் இது 1.58 சதவீதமாகும்.

கேரளா, தமிழ் நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தற்போதைய பாதிப்புகளில் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கோவிட் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in