

12.20 லட்சம் ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம், அதற்குரிய செலவை ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் ஏற்கும் என நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி இன்று அறிவித்துள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், அசென்சர் ஆகிய நிறுவனங்களும், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளும் தங்கள் ஊழியர்களையும், குடும்பத்தினரையும் கரோனா தடுப்பூசி செலுத்தக் கூறியுள்ளன. அதற்குரிய செலவையும் ஏற்பதாகத் தெரிவித்துள்ளன.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும், இயக்குநரான நீட்டா அம்பானி வெளியிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில், " நாங்கள் ஏற்கெனவே கூறியதுபோல், கரோனா தடுப்பூசி வரும்போது உங்கள் குடும்பத்தார், குழந்தைகள் அனைவருக்குமான தடுப்பூசி செலவை நிறுவனம் ஏற்கும் எனத் தெரிவித்திருந்தேன்.
அதன்படி உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாரும் கரோனா தடுப்பூசிக்குப் பதிவு செய்து செலுத்திக்கொள்ளலாம். அதற்குரிய செலவை நிறுவனம் ஏற்கும். நீங்களும், உங்களின் குடும்பத்தாரின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு. எங்கள் ரிலையன்ஸ் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் உடல்நலமும், மகிழ்ச்சியும் முக்கியம் என நானும், முகேஷ் அம்பானியும் கருதுகிறோம்.
கரோனாவுக்கு எதிராகப் பாதுகாப்பாகவும், சுகாதாரத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கரோனாவுக்கு எதிரான ஒட்டுமொத்தப் போரில் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம்.ஒன்றாகச் சேர்ந்து, நாம் கண்டிப்பாக வெல்ல வேண்டும், நாம் வெல்வோம் " எனத் தெரிவித்துள்ளார்.
இதன்படி ரிலையன்ஸ் நிறுவனம் சில குறிப்பிட்ட மருத்துவமனைகளுடன் தொடர்பு வைத்துள்ளது. அந்த மருத்துவமனைகளில் ரிலையன்ஸ் ஊழியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுவார்கள் எனத் தெரிகிறது.