ரயில் டிக்கெட் வாங்காமல் பயணம்: காங். நூதன போராட்டம்

ரயில் டிக்கெட் வாங்காமல் பயணம்:  காங். நூதன போராட்டம்
Updated on
1 min read

ரயில் பயணக் கட்டண உயர்வை கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் காங்கிரஸ் தலைவர்கள் பயண டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணம் மேற்கொண்டு நூதன போராட்டத்தை மேற்கொண்டனர்.

ரயில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதம் உயர்த்தவும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதம் உயர்த்தவும் மத்திய ரயில்வே துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்கள் இன்று ரயில் பயணத்துக்கான டிக்கெட் வாங்காமல் பயணம் மேற்கொண்டு நூதன போராட்டம் மேற்கொண்டனர்.

'சட்ட மறுப்பு போராட்டம்' என்று கூறி, மகாராஷ்டிராவின் புறநகர் ரயில் நிலையங்கள் மற்றும் சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம் என அனைத்து ரயில் நிலையங்களிலுமிருந்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் மேற்கொண்டனர். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மானிக்கராவ் தாக்கரே, எம்.பி ஹுசைன் தல்வாய் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இது குறித்து மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மானிக்ராவ் தாக்கரே கூறுகையில், அரசு அறிவித்துள்ள இந்த விலை உயர்வால், சாமானிய மனிதர்கள் மிகவும் பாதிப்படுவார்கள் . இந்த கட்டண விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அதுவரையில், நாங்கள் இந்த சட்ட மறுப்பு நூதனப் போராட்டத்தை தொடர்வோம்.

முன்னதாக, "ரயில் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் தனது உண்மையான சொரூபத்தை மோடி தலைமையிலான அரசு வெளிப் படுத்தியுள்ளது" என்று மானிக்ராவ் தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் இல்லையெனில் போராட்டம் ஓயாது என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும்பாலும் புறநகர் ரயில்களை நம்பியே வாழ்ந்து வரும் மும்பை மக்கள் இந்தக் கட்டண உயர்வினால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மேலும் மகாராஷ்டிர மாநில பாஜக-வும் ரயில் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in