Last Updated : 05 Mar, 2021 02:49 PM

 

Published : 05 Mar 2021 02:49 PM
Last Updated : 05 Mar 2021 02:49 PM

கேரள முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் என நான் சொல்லவில்லை: பாஜக தலைவர் கே.சுரேந்திரன் திடீர் பல்டி

கேரள மாநில பாஜக முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரனை நான் அறிவிக்கவில்லை, முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் கட்சித் தலைமைதான் அறிவிக்கும் என்று மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சுரேந்திரன் நேற்று அளித்த பேட்டியில், பாஜக முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிலையில் இன்று திடீரென பல்டி அடித்துள்ளது ஏன் எனத் தெரியவில்லை

88 வயதாகும் ஸ்ரீதரன் மெட்ரோமேன் எனப் பரவலாக இந்தியா வெளிநாடுகளிலும் அறியப்பட்டவர். மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதாகவும் தேர்தலில் களம் இறங்கப்போவதாகவும் கூறி கடந்த மாதம் 18-ம் தேதி ஸ்ரீதரன் பாஜகவில் சேர்ந்தார். மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்பட்சத்தில் முதல்வர் பொறுப்பை ஏற்கவும் தயார் என ஸ்ரீதரன் தெரிவித்திருந்தார்.

கேரள பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் நேற்று அளித்த பேட்டியில்கூட, " பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக மெட்ரோமேன் தரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்" என அறிவித்தார்

இந்நிலையில் மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் " பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் வர வேண்டும் எனக் கூறவில்லை. ஸ்ரீதரனை முதல்வராகப் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள் எனத் தெரிவித்தேன்.

பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் : படம் ஏஎன்ஐ

ஆனால், பாஜக முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் என்று நான் அறிவிக்கவில்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். கட்சியின் விருப்பம், மக்களின் விருப்பத்தைத்தான் நான் நேற்று தெரிவித்தேன். நான் அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

ஊடகங்களில் குறிப்பிட்டதைத்தான் வைத்துத்தான், ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் என்று மத்திய அமைச்சர் முரளிதரன் ட்விட் செய்திருந்தார்.
அதன் அடிப்படையில்தான் நான் தெரிவித்தேன். வேட்பாளர்கள் யார், முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் கட்சியின் மத்திய தேர்தல் குழு முடிவு செய்து அறிவிக்கும் " எனத் தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை இணைஅமைச்சர் வி. முரளிதரன் நேற்று தனது ட்விட்டர் பதிவில், " கேரளத் தேர்தலில் ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்து பாஜக தேர்தலைச் சந்திக்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியை பாஜக தோற்கடித்து, ஊழல் இல்லா, வளர்ச்சி சார்ந்த நிர்வாகத்தைக் கேரளாவுக்கு வழங்குவோம்" எனத் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x