கேரள தேர்தல்: ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியிலிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 4 பேர் திடீர் விலகல்

வயநாடு காங்கிரஸ்  எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
1 min read

ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியிலிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 4 பேர் திடீரென கட்சியிலிருந்து விலகியது அந்தக் கட்சியினர் இடையே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத் தலைமை வயநாடு தொகுதியைக் கண்டுகொள்ளவில்லை எனும் அதிருப்தியால், கடந்த 4 நாட்களில் 4 மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் சூழலில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் விலகியது பெரும் நெருக்கடியை அந்தக் கட்சிக்கு ஏற்படுத்தியுள்ளது.

கேரள காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன், கேரள காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பி.கே. அனில் குமார், மகிளா காங்கிரஸ் தலைவர் சுயஜயா வேணுகோபால் ஆகியோர் விலகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.கே.விஸ்வநாதன் கூறுகையில் " மாநில காங்கிரஸ் கட்சி 3 பேரால் மட்டுமே நடத்தப்படுகிறது" எனக் குற்றம்சாட்டினார். எம்.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில் "வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைமை தோல்வி அடைந்துவிட்டதால் கட்சியிலிருந்து விலகுகிறேன்" எனத் தெரிவித்தார். பி.கே.அனில் குமார், லோக்தந்ரிக் ஜனதா தளம் கட்சியில் இணைந்துவிட்டார்.

இதனிடையே மூத்த தலைவர் கே.சுதாகரன், கட்சியிலிருந்து விலகிச் சென்ற தலைவர்கள் 4 பேருடன் சமரசப்பேச்சு நடத்திவருகிறார்.

காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகையில் " வேட்பாளர்கள் தேர்வு முறைப்படி, வெளிப்படையாக நடக்கவில்லை என்பதால், தொண்டர்கள் பலர் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். ராகுல் காந்தியின் சொந்ததொகுதியான வயநாட்டிலிருந்து 4 மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியது தலைமைக்கு பெரும் நெருக்கடியை அளித்துள்ளது" எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in