பிஹாரில் கூட்டாகக் கட்சி தாவும் லோக் ஜன சக்தியினர்: சிராக் பாஸ்வானுக்கு நெருக்கடி

பிஹாரில் கூட்டாகக் கட்சி தாவும் லோக் ஜன சக்தியினர்: சிராக் பாஸ்வானுக்கு நெருக்கடி
Updated on
1 min read

பிஹாரில் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியினர் கும்பல், கும்பலாகப் பல்வேறு கட்சிகளில் தாவத் தொடங்கியுள்ளனர். இதனால், அதன் தலைவர் சிராக் பாஸ்வானுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.

பிஹாரில் தலித் சமூகத் தலைவராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் 2000 -ம் ஆண்டில் தொடங்கிய கட்சி எல்ஜேபி. இவர் காங்கிரஸ், பாஜக என எந்தக் கட்சித் தலைமையில் ஆட்சி வந்தாலும் கூட்டணி மாறி அமைச்சராக இருந்தார்.

கடந்த வருடம் நவம்பரில் முடிந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குச் சற்று முன்பாக அவர் இறந்த பின் கட்சியின் தலைமை மகன் சிராக்கிடம் வந்தது. தேசிய ஜனநாயக முன்னணியில் பிஹாரிலிருந்து மட்டும் வெளியேறிய எல்ஜேபி தனித்துப் போட்டியிட்டது.

இதில் சிராக், பாஜகவை எதிர்க்காமல் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை (ஆர்ஜேடி) மட்டும் குறி வைத்தார். இதனால், தேஜமு வென்றாலும் 115 தொகுதிகளில் பேட்டியிட்ட நிதிஷ் கட்சிக்கு பாஜகவை (74) விடக் குறைவாக 43 தொகுதிகள் மட்டும் கிடைத்தன.

பிஹாரின் பெரும்பாலான தொகுதியில் போட்டியிட்ட சிராக்கிற்கு வெறும் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி கிடைத்தது. இதன் தாக்கம், எல்ஜேபியில் ஏற்படத் தொடங்கியது.

எல்ஜேபியின் நிறுவனரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸின் மறைவால் காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பாஜகவே நிரப்பிக் கொண்டது. இதனால், தேஜமுவிலும் தனது செல்வாக்கை எல்ஜேபி இழக்கத் தொடங்கியதாகக் கருதப்பட்டது.

இதன் காரணமாக, எல்ஜேபியின் முக்கிய நிர்வாகிகள் உட்படப் பலரும் கூட்டமாகக் கட்சியை விட்டு வெளியேறத் தொடங்கி உள்ளனர். முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் ஆர்ஜேடியில் இணைந்தனர்.

அடுத்து ஜேடியுவில் இணைந்த சுமார் 150 பேரில் 18 மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் இருந்தனர். எல்ஜேபியின் ஒரே ஒரு எம்எல்ஏவும், மக்களவையின் 6 எம்.பி.க்களும் கூட நிதிஷுடன் விரைவில் இணையவிருப்பதாகத் தெரிகிறது.

இச்சூழலில், பாஜகவிலும் நேற்று முன்தினம் எல்ஜேபியின் பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 250 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இதனால், எல்ஜேபியின் கூடாரம் காலியாவதுடன், சிராக் மீது பிஹாரின் காவல் நிலையங்களில் புகார்களும், நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் எல்ஜேபியில் இருந்து வெளியேறிய முன்னாள் நிர்வாகிகள் கூறும்போது, ''தன் தந்தையைப் போல் அன்றி சிராக்கின் தவறான முடிவுகளால் கட்சி மூழ்கும் கப்பலாகி விட்டது.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாகக் கூறி பலரிடம் பணமோசடி செய்துள்ளார் சிராக். இவரது 8 நிறுவனங்கள் மற்றும் 4 அறக்கட்டளைகளுக்கு வருமான வரி செலுத்துவதே கிடையாது. அத்தனை மோசடிகளையும் தொகுத்து விரைவில் வெளியிட்டு முதல்வர் நிதிஷிடம் நடவடிக்கைக்கு வலியுறுத்துவோம்'' எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in