Published : 05 Mar 2021 10:21 AM
Last Updated : 05 Mar 2021 10:21 AM

மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் வியூகம்: மம்தாவுக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ சுவேந்து அதிகாரியை களமிறக்க திட்டம்

இடது சுவேந்து அதிகாரி, வலது மம்தா பானர்ஜி

மேற்குவங்க தேர்தலில் மம்தாவுக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ சுவேந்து அதிகாரியை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் கவனமாகக் கையாண்டு வருகிறது பாஜக.

இந்த ஐந்து மாநிலங்களிலும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் அதே வேளையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு நேற்று மாலை டெல்லியில் கூடியது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா அடங்கிய இந்தக் குழுவினர் நேற்று இரவு வரை ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

கூட்டத்தில் குறிப்பாக மேற்குவங்க தேர்தல் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதில் மேற்குவங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக அவரது கட்சி முன்னாள் எம்எல்ஏ (தற்போது பாஜகவில் இணைந்தார்) சுவேந்து அதிகாரியை களமிறக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக நந்திரகிராமில் விவசாயிகள் நடத்திய போராட்டம் தான் மம்தாவுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கியது. அதனால் இந்தத் தொகுதி அவருக்கு மிகவும் முக்கியமான தொகுதி. ஆனால், அந்தத் தொகுதியில் திரிணாமூலை வளர்த்தெடுத்தது சுவேந்து அதிகாரி என்பதால் அவரைக் களமிறக்குவதையும் பாஜக மேலிடம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது

நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட சுவேந்து அதிகாரி, தன்னை மம்தாவுக்கு எதிராக நந்திகிராமில் களமிறக்கினால், தன்னால் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேபோல் மம்தா களமிறங்கும் மற்றொரு தொகுதியான பவானிபூரில் பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோவை களமிறக்கலாம் என்ற யோசனையிலும் கட்சி மேலிடம் உள்ளது.

இதில் இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான மூவர் குழு இன்று இறுதி செயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவது பற்றி பேசிய மம்தா பானர்ஜி, நந்திகிராம் எனது மூத்த சகோதரி, பவானிபூர் எனது இளைய சகோதரி. நான் இரு தொகுதிகளிலும் போட்டியிடுவேன். ஒருவேளை என்னால் பவானிபூரில் போட்டியிட இயலவில்லை என்றால் வேறொருவர் திரிணமூல் சார்பில் களமிறங்குவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதே நாளில் பேசிய சுவேந்து அதிகாரி, நந்திகிராமில் அரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மம்தாவை வீழ்த்தாவிட்டால் நான் அரசியலில் இருந்தே விலகிவிடுகிறேன் எனத் தெரிவித்தார்.

இத்தகைய சூழலில் இன்று மாலை மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடும் எனத் தெரிகிறது.

பிரதமர் எச்சரிக்கை:

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் தேர்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், சுவேந்து அதிகாரி மற்றும் ராஜீப் பானர்ஜி பிரச்சார மேடைகளில் அடக்கி வாசிக்கும்படி பிரதமர் மோடி எச்சரித்துள்ளாராம். மக்களின் மனநிலையை அறிந்து கவனமாகப் பேச வேண்டும் என்றும், அவர்களின் பேச்சு கட்சிக்கு எதிராகத் திரும்பிவிடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளாராம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x