

நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங் களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறு கின்றன. இம்மாநிலங்களுக்கான தேர் தல் தேதிகளை கடந்த 26-ம் தேதி தேர்தல் ஆணையர் அறிவித்தார். அன்று முதலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன.
அதன்படி, விளம்பரப் பதாதைகள், போஸ்டர்கள் மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் சிலைகள், புகைப்படங்கள் ஆகியவையும் மூடப் பட்டிருக்கின்றன.
இந்த சூழலில், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப் படத்துடன் கூடிய விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன. மேலும், அந்தப் பதாகை களில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்காளர் கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, மோடி படத்துடன் கூடிய விளம்பர பதாகைகளை அகற்ற வேண் டும் என்று வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சிகளின் இந்தப் புகார் களை பரிசீலித்த தலைமைத் தேர்தல் ஆணையம், பிரதமரின் பதாகை களை 72 மணி நேரத்துக்குள் அகற்று மாறு அனைத்து பெட்ரோல் நிலையங் களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
சான்றிதழுக்கு எதிர்ப்பு
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவில் தடுப்பூசி போட்டதற்காக வழங்கப்பட்ட சான் றிதழில் பிரதமர் மோடி படமும், அவருடைய உரையின் சில பகுதிகளும் அச்சிடப்பட்டிருந்தன.
கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், கோவிட்-19 சான்றிதழில் மோடி படம் இடம்பெற்றிருப்பது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் மிதுன் ஷா தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளார்.