

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் உள்ளது. இதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் உ.பி. காவல் துறையின் அவசர உதவி எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர்ஒருவர், தாஜ்மகால் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்தார்.
இதையடுத்து அங்கிருந்து பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே தொலைபேசி தகவல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதையடுத்து 11 மணியளவில் பார்வையாளர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வெடிகுண்டு புரளி தொடர்பாக காஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த விமல் குமார் சிங் என்பவரை போலீஸார் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில், விமல் குமார் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.