பாரீஸ் நகரில் ஐ.எஸ். தாக்குதல் எதிரொலி: விழிப்புடன் இருக்க மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) அமைப்பின் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநில அரசுகள் விழிப்புடன் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரீஸ் நகரின் பல்வேறு இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.எஸ். நடத்திய தாக்குதலில் 129 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸில் அவசர நிலையை அதிபர் ஹொலாந்தே பிரகடனம் செய்தார். இந்த தாக்குதல் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் ஆலோசனை கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாரீஸ் நகரில் ஐ.எஸ். அமைப்பு நடத்திய சமீபத்திய தாக்குதல், அந்த அமைப்பு தனது செயல்பாடுகளை இராக், சிரியாவுக்கு அப்பாலும் விரிவுபடுத்த விரும்புவதை தெளிவாகக் காட்டுகிறது. எனவே எவ்வித அசம்பாவித சம்பவங்களையும் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம்.
வெளிநாட்டுத் தூதரகங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா மையங்கள், வெளிநாட்டினர் அதிகம் செல்லும் இடங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும்.
குறிப்பாக பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்திரேலியா, துருக்கி, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தூதரங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மறு ஆய்வு செய்து பலப்படுத்த வேண்டும்.
ஐ.எஸ். அமைப்பு இந்தியாவில் வலுவான அமைப்பாக இல்லாவிட்டாலும், இந்திய இளைஞர்களை பலரை ஈர்ப்பதில் வெற்றி கண்டுள்ளது. எனவே இந்தியாவில் ஐ.எஸ். தாக்குதலுக்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எந்தவொரு குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் ஐ.எஸ். அச்சுறுத்தலாக இல்லை. உலக நாடுகள் அனைத்துக்கும் ஐ.எஸ். அச்சுறுத்தலாக உள்ளது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா விழிப்புடன் இருந்து வருகிறது” என்றார்.
தற்போது சுமார் 20 இந்தியர்கள் இராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். அமைப்புக்காக சண்டையிட்டு வருவதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை புறநகர், கல்யான் பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் காஷ்மீரி ஒருவர், தெலங்கானா மற்றும் கர்நாடகத்தில் இருந்து தலா ஒருவர், ஓமன் மற்றும் சிங்கப்பூரில் இருந்து தலா 1 இந்தியர் ஆகியோர் இவர்களில் அடங்குவர்.
மும்பை கல்யான் பகுதி இளைஞர் ஒருவர், ஐ.எஸ். அமைப்பில் சுமார் 6 மாதங்கள் பணியாற்றிவிட்டு கடந்த ஆண்டு இந்தியா திரும்பியபோது, கைது செய்யப்பட்டார்.
ஐ.எஸ். அமைப்பில் பணியாற்றிய இந்தியர்களில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள். இவர்கள் பாகிஸ்தானில் இருந்து சிரியா சென்றுள்ளர். இவர்களைத் தவிர மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஒருவர் தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் ஐ.எஸ். அமைப்பில் பணியாற்றும்போது கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ். அமைப்பில் சேருவதற்காக சிரியா செல்ல முயன்ற 17 இந்திய இளைஞர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
