Last Updated : 04 Mar, 2021 03:17 PM

 

Published : 04 Mar 2021 03:17 PM
Last Updated : 04 Mar 2021 03:17 PM

ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் லிட்டர் ரூ.75, டீசல் லிட்டர் 68 ஆகக் குறையும்; அரசியல் கட்சிகளுக்கு விருப்பமில்லை எஸ்பிஐ வங்கி ஆய்வில் தகவல்

கோப்புப்படம்

மும்பை


ஜிஎஸ்டி வரிமுறைக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வந்தால், பெட்ரோல் லிட்டர் ரூ.75 ஆகவும், டீசல் ரூ.68 ஆகவும் குறையும். ஆனால், அரசியல் ரீதியாக அதைச் செய்ய விருப்பமில்லை என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பொருளாதார வல்லுநர்கள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் விலை கடந்த இரு வாரங்களுக்கு முன் நாள்தோறும் உயர்த்தப்பட்டு வந்தது. தொடர்ந்து 12 நாட்கள் விலை உயர்த்தப்பட்டதால், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசத்தில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100 ஆகவும், டீசல் விலை 88 ரூபாய்க்கும் மேல் அதிகரித்தது.

அதிகரித்து வரும் விலை உயர்வால் மக்களின் சிரமத்தைக் குறைக்க அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்கள் வரியைக் குறைத்தன. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிமுறைக்குள் கொண்டுவந்தால், விலை குறையும் என கருத்து தொடர்ந்து இருந்து வருகிறது.

எஸ்பிஐ வங்கியின் பொருளாதார வல்லுநர்கள் குழு நடத்திய ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பெட்ரோல், டீசல் எரிபொருளை ஜிஎஸ்டி வரி முறைக்குள் கொண்டுவர வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோலைக் கொண்டு வந்தால் பெட்ரோல் லிட்டர் ரூ.75 ஆகவும், டீசல் ரூ.68ஆகவும் குறையக்கூடும்.

ஆனால், ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவந்தால், மத்தியஅரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வரி வருவாய் கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக ஜிடிபியில் 0.4 சதவீதம் அல்லது ரூ.ஒரு லட்சம் கோடி வரிவருவாய் இழப்பு ஏற்படும். இந்த கணிப்பு என்பது கச்சா எண்ணெய் விலை பேரல்60 டாலராக இருந்தபோது கணிக்கிடப்பட்டுள்ளது.

தற்போது ஒவ்வொரு மாநிலமும், பெட்ரோல், டீசலுக்கு ஒவ்வொரு விதமான வரியை விதிக்கின்றன. மத்தியஅரசு தனியாக தனதுபங்கிற்கு உற்பத்தி வரி, செஸ் வரியை விதிக்கின்றன. இதனால் ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயைக் கடந்துவிட்டது.

பெட்ரோல், டீசல் எரிபொருளை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரவேண்டும் என்று நீண்டகாலமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதை செயல்படுத்த அரசியல் ரீதியாக விருப்பமில்லாமல் கிடப்பில் இருந்து வருகிறது. ஏனென்றால் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வரி வருவாய் ஈட்டித் தருவதில் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் முக்கியமான காரணி என்பதால், அதை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவதற்கு தயக்கம் காட்டுக்கின்றனர்.

தற்போது பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, செஸ், வாட் வரி, கூடுதல் வரி, போக்குவரத்துக் கட்டணம், டீசல் கமிஷன் உள்ளிட்டவை சேர்த்து விற்பனை செய்யப்படும்போது கடுமையாக விலை உயர்வைச் சந்திக்கிறது.

ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவதாக ஊகம் செய்தால், டீசலுக்கு போக்குவரத்து கட்டணம் லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.25 ஆகவும், பெட்ரோலுக்கு ரூ.3.82ஆகவும், டீசல் கமிஷன் டீசலுக்கு லிட்டர் ரூ.2.53,பெட்ரோலுக்கு ரூ.3.67 ஆகவும் இருக்கிறது. இதுதவிர பெட்ரோலுக்கு ரூ.30ஆகவும், டீசலுக்கு ரூ.20ஆகவும் விதிக்கப்படும் செஸ் வரி சமபங்காக மத்திய மாநில அரசுகள் பிரித்துக்கொள்ளும், ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் விகிக்கப்படக்கூடும். இதன் மூலம் பெட்ரோல் லிட்டர் ரூ.75ஆகவும், டீசல் லிட்டர் ரூ.68 ஆகவும் குறையக்கூடும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் உயரும்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசாவும், டீசல் லிட்டர் ரூ.1.50 அதிகரிக்கும். ஆனால், இவை அனைத்தும் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரப்பட்டால், நுகர்வோர்கள் தற்போது வாங்கும் விலையிலிருந்து பெட்ரோல் ,டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.30 குறையும். அதேநேரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வரிவருவாயில் பெரும் இழப்பு ஏற்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x