Published : 04 Mar 2021 05:51 AM
Last Updated : 04 Mar 2021 05:51 AM

மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை - அனைத்து நாட்களிலும் எந்நேரமும் தடுப்பூசி போடலாம்

அதிக அளவிலான மக்கள் பயனடையும் விதமாகவும், ஒரே நேரத்தில்மருத்துவமனைகள் முன்புகூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் கரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கான நேரக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன்மூலம் 24 மணி நேரத்தில் எப்போதுவேண்டுமானாலும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜன.16-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர் களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில் 1.50 கோடிக்கும் மேற் பட்டோர் பலனடைந்தனர்.

இந்நிலையில், 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர் கள், 45 வயதை கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1-ம் தேதி சென்று கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக, மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், எம்பி.க்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும் கரோனா தடுப்பூசிகளை ஆர்வமாகமுன்வந்து செலுத்திக் கொண்டனர். தினமும் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசிக்கு முன்பதிவும் செய்து வருகின்றனர்.

இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும்,தடுப்பூசிக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.

மத்திய அரசு பரிசீலனை

இந்த விவகாரம் குறித்து தீவிரமாக பரிசீலனை நடத்திய மத்தியஅரசு, கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாட்டை நீக்கி நேற்று உத்தரவிட்டது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய மக்களின் ஆரோக்கியத்தையும், அதே நேரத்தில் அவர்களின் பொன்னான நேரத்தின் மதிப்பையும் பிரதமர் மோடி உணர்ந்துள்ளார். அவரது அறிவுறுத்தலின்படி,கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நேரக் கட்டுப்பாட்டை மத்தியசுகாதாரத் துறை அமைச்சகம் நீக்கியிருக்கிறது. வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும். இதன்மூலம் மக்கள் தங்களுக்கு சவுகரியப்பட்ட நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.

இவ்வாறு ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத் துறைசெயலர் ராஜேஷ் பூஷண் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘கரோனா தடுப்பூசிகளை செலுத்தும் மருத்துவமனைகள் எந்த காலஅளவையும் பின்பற்ற வேண்டாம். தற்போது காலை 9 முதல் மாலை 5 மணி என நேரக் கட்டுப்பாடு இருப்பதை, தங்கள் விருப்பத்துக்கேற்ப மருத்துவமனைகள் நீட்டித்துக்கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x