

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2013-ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்தது.
இந்த சட்டத்தின் படி நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கு ஏழை மக்களுக்கு மானிய விலையில் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், இந்த 5 கிலோ தானியங்களும் ரூ.1 முதல் 3 ரூபாய்க்கு வழங்கப்படும்.
இந்த சட்டத்தை எல்லா மாநிலங்களும் அமல்படுத்த ஓராண்டு கால அவகாசம் கொடுக் கப்பட்டது. அதன்பிறகு 3 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
எனினும் இந்தச் சட்டத்துக்கு தமிழகம் உட்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஏனெனில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் உணவு தானிய அளவு குறைக்கப்பட்டுவிட்டது. அதனால் சட்டத்தை அமல்படுத்த தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், மாநில உணவுத் துறை செயலர்களுடன் மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பாஸ்வான் கூறியதாவது:
இதுவரை 22 மாநிலங்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த தொடங்கி விட்டன. 14 மாநிலங்கள் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நட வடிக்கைகளை எடுக்க தொடங்கி விட்டன.
தமிழகத்தை தவிர மற்ற எல்லா மாநிலங்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல் படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.
ஆந்திராவும் சிக்கிம் மாநிலமும் டிசம்பர் மாதத்தில் அமல்படுத்த உள்ளன. இவ்வாறு பாஸ்வான் கூறினார்.