

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கொல்கத்தாவில் பாஜக சார்பில் வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதில், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷமிக் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கங்குலி வீட்டில் ஓய்வில் இருப்பது எங்களுக்கு தெரியும். அவர் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விரும்பினால், அவரது உடல்நிலையும் வானிலையும் அனுமதித்தால் அவரை வரவேற்க தயாராக உள்ளோம். இக்கூட்டத்தில் அவர் பங்கேற்றால், அதை அவர் விரும்புவார் என கருதுகிறோம். பொதுமக்களும் அதை விரும்புவர். ஆனால், அவர் பங்கேற்பாரா என்பது தெரியாது. இதுபற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கங்குலி அரசியலில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுபற்றி அவர் இதுவரை எதுவும் கூறவில்லை.