

பிரிட்டன் தலைநகர் லண்டனில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு இல்லத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் கடந்த 1921-ம் ஆண்டு லண்டனில் தங்கி பொருளாதார பட்டப்படிப்பு படித்தார். அவர் தங்கி படித்த வீட்டை இரு மாதங்களுக்கு முன் இந்திய அரசு வாங்கி நினைவு இல்லமாக மாற்ற புனரமைப்பு பணிகளை மேற்கொண்டது. மூன்று அடுக்கு மாடிகள் கொண்ட இந்த இல்லத்தில் மொத்தம் ஆறு அறைகள் உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், இந்த நினைவு இல்லத்தை துவக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு, ஒரு பகுதி மட்டும் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்த நினைவு இல்லத்தை துவக்கி வைத்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் மார்பளவு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்காக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸும், உடன் சென்றிருந்தார்.
மூன்று மாடிகள் கொண்ட நினைவு இல்லத்தை புனரமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்ததும், மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒரு பகுதியை அருங்காட்சியகமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், அம்பேத்கர் பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய கடிதங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்படும் என தெரிகிறது.