

பாகிஸ்தானிலிருந்து ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக போதைப்பொருட்கள் கடத்திவருவதாக புகார் எழுந்தது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதும் தெரியவந்தது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கடத்தல்காரர்களுக்கு எல்லை பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எப்) துணை உதவி-ஆய்வாளர் ரமேஷ் குமார் உதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் ஹண்ட்வாராவில் உள்ள ரமேஷ் குமாரின் வீட்டில் கடந்த 1-ம் தேதி சோதனை நடத்தினர்.
அப்போது ரமேஷ் குமாரிடம் சில மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னர் அவரை கைது செய்தனர்.பின்னர் ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ரமேஷை 2 வாரம் என்ஐஏ காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.