

விண்வெளி, அணு ஆற்றல் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறமையான இளைஞர்களுக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் குறித்த இணைய கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது: புதிய தேசிய கல்விக் கொள்கையில் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது. இனி ஆக்கப்பூர்வமான, அறிவு சார்ந்த தகவல்கள்,புத்தகங்கள் அனைத்தும் நாட்டின்அனைத்து மொழிகளிலும் கிடைக்கும்படி செய்ய வேண்டிய பொறுப்பு அனைத்து கல்வியாளர்களுக்கும், நிபுணர்களுக்கும் உள்ளது.
மேலும் சுகாதாரம், ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு அடுத்து மத்திய பட்ஜெட்டில் கல்வி, திறன் வளர்ப்பு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கே பெரிய அளவில் கவனம் தரப்பட்டுள்ளது. ஏனெனில் பல துறைகளில் போதுமான அறிவும், ஆராய்ச்சியும் குறைவாக இருப்பது நாட்டின் உண்மையான செயல்திறனை வெளிகொண்டுவர முடியாமல் போய்விடும். எனவேதான் மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுடன் இணைக்கும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
சுயசார்பு இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் தன்னம்பிக்கை இழக்காமல் இருப்பது மிகவும் அவசியம். அத்தகைய தளராத தன்னம்பிக்கையைப் பெறுவது கல்வி மற்றும் அறிவு மீது முழு நம்பிக்கை கொண்டிருப்பதன் மூலமே சாத்தியம். விண்வெளி, அணு ஆற்றல், டிஆர்டிஓ மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறமையான இளைஞர்களுக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.