

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ரூ. 2.58 கோடி ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
மத்திய கிராம சுகாதார திட்டத்தின் (என்.ஆர்.எச்.எம்) கீழ் ஜெய்ப்பூரில் கடந்த 2010-11 ஆம் ஆண்டுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக டெண்டர் அளிக்கப்பட்டிருந்தது.
அது, அரசியல் தொடர்புகளின் காரணமாக ‘சிகித்சா ஹெல்த்கேர்’ எனும் நிறுவனத்துக்கு முறைகேடாக அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் ரூ. 2.58 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் ஜெய்ப்பூரின் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர் மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பங்கஜ் ஜோஷி, கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி இந்தப் புகாரை அளித்திருந்தார். இப்புகாரில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.ஏ.கான், சிகித்சா ஹெல்த்கேர் நிறுவனத்தின் இணை நிறுவனரும் முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகனுமான ரவி கிருஷ்ணா, அந்நிறுவனத்தின் இயக்குநர்களான முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், அந்நிறுவனத்தின் முன்னாள் முதன்மை அதிகாரி ஸ்வேதா மங்கல், என்.ஆர்.எச்.எம். முன்னாள் இயக்குநரும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் முன்னாள் பொருளாதார ஆலோசகருமான ஷபி மாத்தேர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை அதிகாரி சாவந்த் சிங் கூறுகையில், “துவக்க கட்ட விசாரணையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கருதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, மோசடி செய்ததாக ஐபிசி 420, பாதுகாப்பு ஆவணங்களை திருத்தியதாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 467, 471 மற்றும் 468, குற்றச் சதி செய்ததாக 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது” என்றார்.
புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், “இதுபோன்ற டெண்டர் அளிக்கும் முடிவுகளை முதல்வர் எடுப்பதில்லை” என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் ‘தி இந்து’விடம் கூறுகையில், “ராஜஸ்தானில் ஆளும் பாஜகவின் உள்நோக்கம் காரணமாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இதன் மீது விசாரணை நடத்த வேண்டும் எனில், அது மாநிலத்துக்கு வெளியே, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணையாக இருக்க வேண்டும்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “பாஜக மூத்த தலைவர் கீர்த்தி சௌமியா இந்தப் புகாரை கடந்த ஆண்டு எழுப்பினார்.
இதையடுத்து அவருக்கு நான் அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பினேன்” என்றார்.