நிதிஷ் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சோனியா, மம்தா, கேஜ்ரிவாலுக்கு அழைப்பு: லாலு பிரசாத் கட்சிக்கு 15 அமைச்சர் பதவி

நிதிஷ் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சோனியா, மம்தா, கேஜ்ரிவாலுக்கு அழைப்பு: லாலு பிரசாத் கட்சிக்கு 15 அமைச்சர் பதவி
Updated on
1 min read

பிஹாரில் நிதிஷ் குமார் பதவியேற்கும் விழாவில் சோனியா, மம்தா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கின்றனர். இது எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின் தொடக்கமாக கூறப்படுகிறது.

பிஹாரில் எதிரும் புதிருமாக இருந்த ஐக்கிய ஜனதா தள (ஐஜத) மூத்த தலைவர் நிதிஷ் குமாரும் ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத்தும், சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து அனைவரையும் ஆச்சரி யப்படுத்தினர். இவர்களுடன் காங்கிரஸ் இணைந்த போது மெகா கூட்டணியாக உருவானது. தேர்தலில் இந்த கூட்டணி 178 இடங்களை கைப்பற்றியது. லாலுவின் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக 80 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்து ஐஜத 71 இடங்களையும், காங்கிரஸ் 27 இடங்களையும் கைப்பற்றின.

ஆர்ஜேடி அதிக இடங்களில் வென்றிருந்தாலும், அடுத்த முதல்வர் நிதிஷ்தான் என்று லாலு திட்டவட்டமாக கூறிவிட்டார். இதையடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் மெகா கூட்டணி எம்எல்ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நடக்கிறது. அப்போது முதல்வர் பதவிக்கு நிதிஷ் குமாரை அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்க உள்ளனர். அதன்பின், வரும் 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், ராகுல் காந்தி உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அசாம் முதல்வர் தருண் கோகாய், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, ஹேமந்த் சோரன், முன்னாள் பிரதமர் தேவகவுடா உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து ஐஜத செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக் கூறும்போது, “நிதிஷ் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, பாஜக.வை எதிர்க்கும் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க உள்ளோம். இந்த பதவியேற்பு விழாவில் ஆர்ஜேடி தலைவர் லாலு, ஐஜத தலைவர் சரத் யாதவ் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக இருப்பர்” என்றார்.

இதுகுறித்து ஐஜத பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறும்போது, “பாஜக.வை எதிர்க்கும் எல்லா எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு இந்த பதவியேற்பு விழா ஒரு தொடக்கமாக இருக்கும்’’ என்றார்.

புதிய அரசில் லாலு கட்சியை சேர்ந்த 16 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும். ஐஜத.வில் 15, காங்கிரஸில் 5 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று மெகா கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in