

பலாத்காரம் செய்த பெண்ணேயே திருமணம் செய்து கொள்கிறாயா என குற்றம்சாட்டப்படவரிடம், நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் கேள்வி கேட்டோம் என்று உச்ச நீதிமன்ற அலுவலர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
நீதிமன்றத்தின் மீது தேவையற்ற விமர்சனங்கள் வைப்பது நியாயமற்றது. ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளதைத்தான் நீதிபதிகள் கேள்வியாக எழுப்பினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் மின்துறையில் பணியில் இருப்பவர் மோஹித் சுபாஷ் சவான். இவர் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார் .
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மோஹித், கைது நடவடிக்கையைத் தவிர்க்க முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஏற்கெனவே விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
ஆனால், மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டேவின் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாலசுப்ரமணியன், போபண்ணா அமர்வின் கீழ் இரு நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்டவரிடம், "பாதிக்கப்பட்ட பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்கிறீர்களா?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறாயா? என குற்றம்சாட்டப்பட்டவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியது கடும் சர்ச்சையை எழுப்பியது.
பெண்ணிய அமைப்புகள், பெண்ணியவாதிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு தலைமை நீதிபதி மன்னிப்புக் கோர வேண்டும் என பெண் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள் வலியுறுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டேவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அந்தக் கடிதத்தில், " பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்துகொள்கிறாயா என குற்றம் செய்தவரிடமே கேட்டது, பிற்போக்குத்தனமான செயலாக இருக்கிறது. தலைமை நீதிபதி தனது வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள உச்ச நீதிமன்ற அலுவலர் ஒருவர் " உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதும், விமர்சிப்பதும் நியாயமற்றது. மனுதாரர்கள் நீதிமன்றத்தில் அளித்த ஆவணங்களில் இருந்த விவரங்கள் அடிப்படையில்தான் இந்தக் கேள்வியை நீதிபதிகள் கேட்டனர்
மனுதாரர் அளித்த மனுவில், பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரின் தாயும் காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்தனர். அப்போது குற்றம்சாட்டவரின் தாய், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் ஏதும் தர வேண்டாம். குற்றத்தை ஏற்றுக்கொள்கிறோம், உன்னை மருமகளாக ஏற்கவும் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
பெண்ணுக்கு 18-வயது நிரம்பியவுடன் திருமணம் செய்து கொள்வதாக இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது. பெண்ணுக்கு 18 வயது என்பது கடந்த 2018, ஜூன் 2-ம்தேதியே நிறைவடைந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், குற்றம்சாட்டப்பட்டவரின் தாயிடம் சென்று ஏற்கெனவே உறுதி அளித்ததுபோல் என் மகளை உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்றார்.
ஆனால், அதற்கு குற்றம்சாட்டப்பட்டவரின் தாய் மறுக்கவே, அதன்பின் காவல்நிலையத்தில் சமீபத்தில் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட பெண்வீட்டாரும், குற்றம்சாட்டப்பட்டவரும் உறவினர்கள்.
இந்தமனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, போபன்னா, ராமசுப்பிரமணியம் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் அளித்த ஆவணங்களில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில்தான், "நீ அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாயா?" என என குற்றம்சாட்டப்பட்டவரிடம் நீதிபதிகள் கேட்டனர். அதுமட்டுமல்லாமல், "நீ அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதை நாங்கள் பரிசீலிக்கிறோம். இல்லாவிட்டால், நீங்கள் சிறைக்குச் செல்ல நேரிடும். நாங்கள் திருமணம் செய்யக் கூறி உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை" எனத் தெரிவித்தனர். ஆதலால், ஆவணங்கள் அடிப்படையில்தான் கேள்வி எழுப்பப்பட்டது" எனத் தெரிவித்தார்.