Last Updated : 17 Nov, 2015 06:14 PM

 

Published : 17 Nov 2015 06:14 PM
Last Updated : 17 Nov 2015 06:14 PM

பாக். சேனலில் மோடி பற்றிய மணி சங்கர் கருத்தால் சர்ச்சை

பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் ‘இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டுமென்றால் மோடி அகற்றப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சியின் மணி சங்கர் அய்யர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

துனியா டிவி விவாதத்தில், “முதலில் மோடியை அகற்ற வேண்டும், அதன் பிறகே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். நாம் 4 ஆண்டுகாலம் இதற்காகக் காத்திருக்க வேண்டும். விவாதத்தில் பங்கேற்றவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர், ஆனால் மோடி சாஹப் இருக்கிறாரே, பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.

எங்களை (காங்கிரஸ்) மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும். அவர்களை அகற்ற வேண்டும். இதைத்தவிர இந்திய-பாகிஸ்தான் உறவுகள் மேம்பட வேறு வழியில்லை. நாங்கள் அவர்களை அகற்றிவிடுவோம், ஆனால் அதுவரை நீங்கள் (பாகிஸ்தான்) காத்திருக்க வேண்டும்” என்று கூறினார் மணி சங்கர் அய்யர்.

இவரது இத்தகைய பேச்சுக்கு பாஜக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. சோனியா மற்றும் ராகுல் காந்தி இது குறித்து தங்களது நிலைப்பாட்டை தேசத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

ஆனால் மணி சங்கர் அய்யரின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சியின் டாம் வடக்கன் கூறும்போது, “இது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இது பற்றி மணி சங்கர் எழுதிய கடிதம் என்னிடம் உள்ளது, இதில் அவர் உறுதியாக இந்தச் செய்தியை மறுத்துள்ளார்” என்றார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் நளின் கோலி கூறும்போது, “இந்தியாவுக்கு எதிரான ஒருநாட்டில், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நாட்டில் ஒரு வாரகாலத்துக்குள் மூத்த காங்கிரஸ் தலைவர்களான மணி சங்கர் மற்றும் சல்மான் குர்ஷித் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியுள்ளனர் என்பது மிகவும் மோசமானது, கவலையளிக்கக் கூடியது” என்றார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மனோஜ் ஜா கூறும்போது, “எல்.கே.ஜி மாணவர் கூட இவ்வாறு பேசியிருக்க மாட்டார், குறைந்தபட்ச திடமான மனநிலையில் உள்ளவர்கள் கூட மணி சங்கரின் இந்தக் கூற்றுக்கு கண்டனம் தெரிவிப்பர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x