

தன் கட்டளைக்கு கீழ்ப்படியாத பெண் ஐபிஎஸ் அதிகாரியை கண்டித்து ஹரியாணா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ், கூட்டத்தை விட்டு வெளியேறினார். இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அந்த அதிகாரி திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம் பதே பாத்தில் மாவட்ட குறைதீர்வு மற்றும் மக்கள் தொடர்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் காவல்துறை இணை ஆணையர் சோலங்கி, மாவட்ட எஸ்.பி. சங்கீதா ஐபிஎஸ் உட்பட உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கூட்டத்துக்கு தலைமையேற்று பல்வேறு பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் விவாதித்தார். அப்போது கிராமங்களில் நடக்கும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மாவட்ட எஸ்.பி. சங்கீதா கடந்த 10 மாதங்களில் மட்டும் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். எனினும் திருப்தி அடையாத அமைச்சர் அனில் விஜ் உறுதியான நடவடிக்கைகள் எடுக்காதது ஏன் என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பினார். இதனால் இருவருக்கும் இடையே நீண்ட வாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அமைச்சர் அனில், திடீரென எஸ்.பி. சங்கீதாவை கூட்டத்தை விட்டு வெளியேறும்படி உரக்க கத்தினார். இதனால் அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியும் சலசலப்பும் ஏற்பட்டது. எஸ்.பி. சங்கீதா உடனடியாக கூட்டத்தை விட்டு வெளியேறாமல் அமைதி காத்தார். அத்துடன் அமைச்சரின் இந்த அணுகுமுறைக்கு ஆட்சேபம் தெரிவித்து வெளியேற முடியாது என்றும் மறுத்தார்.
சங்கீதாவின் இந்த பதிலால் மேலும் ஆத்திரமடைந்த அமைச்சர் அனில் விஜ், உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்து கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தொண்டர்கள், குழு உறுப்பினர்கள் ஆகியோ ரும் வெளியேறினர். அமைச்சரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அரசு அதிகாரிகள் பலர் கோஷம் எழுப்பியதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அவர்களை இணை ஆணையர் சோலங்கி அமைதிப்படுத்தி, கூட்டத்தை நடத்தினார்.
இந்நிலையில் எஸ்.பி. சங்கீதாவை ஹரியாணா மாநில அரசு நேற்று திடீரென பணியிட மாற்றம் செய் துள்ளது.
பெண் போலீஸ் அதிகாரி மீது பாஜக அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் பூபீந்தர் சிங் ஹுடா கூறுகையில், ‘‘ஒரு பெண் அதிகாரியிடம் பேசும்போது நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்’’ என்றார்.
பெண் அதிகாரி சங்கீதாவுக்கு ஆதரவாக தற்போது பலர் குரல் கொடுத்து வருவதால், ஹரியாணா மாநில அரசியலில் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது.