

இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குக் கல்விக்காக வரும் மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக குறைந்திருப்பதையும், மாணவர் விசாக்கள் குறித்த பிரச்சினைகளையும் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனிடம் எழுப்பினார்.
பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் இந்த விவகாரத்தை எழுப்பினார்.
இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "மாணவர்கள் விசா விவகாரத்தை பிரதமர் மோடி மிகவும் வலிமையாக எழுப்பினார். பிரிட்டனில் கல்விக்காக வரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 50%-ஆக குறைந்துள்ளது என்பதை மோடி டேவிட் கேமரூனிடம் சுட்டிக் காட்டினார்.
இந்தியா இன்று ஒரு மிகப்பெரிய கல்விச்சந்தையாக திகழ்கிறது என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டி பேசினார். வளரும் நடுத்தர மக்கள், லட்சியமான மேட்டுக் குடி வர்க்கத்தினர் தங்கள் வாரிசுகள் அயல்நாட்டில் படிக்க வேண்டும் என விரும்புகின்றனர். எனவே இந்தியக் கல்விச் சந்தை அளிக்கும் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம் என்று பிரதமர் கூறினார்.
இது குறித்து கேமரூன் என்ன கூறினார் என்பது பற்றி கூறும்போது, “நிறைய புரிதலும், பாராட்டுதலும் இருந்தன. இது தொடர்ச்சியான விவாதத்துக்குரிய விஷயம். இது குறித்த விவகாரத்தை நாம் உடனடியாக முடித்து வைக்க முடியாது” என்றார்.
2010-11-ம் ஆண்டில் பிரிட்டன் சென்ற இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 18,535 ஆக இருந்தது, இது 2012-13-ல் 10,235-ஆக குறைந்தது.
படிப்பை முடித்த பிறகு பிரிட்டனிலேயே 2 ஆண்டுகள் பணியாற்றக் கூடிய கல்விக்குப் பிந்தைய பணி விசா முறை அகற்றப்பட்டதையடுத்து மாணவர்கள் அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவை தேர்வு செய்யத் தொடங்கினர்.