ஆபாச வீடியோ விவகாரம்: பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி ராஜினாமா

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி : கோப்புப்படம்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி : கோப்புப்படம்
Updated on
2 min read

ஆபாச வீடியோ மற்றும் பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

ஒரு பெண்ணுக்கு வேலைவாங்கித் தருவதாகக் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமைச்சர் ஜர்ஹிகோலி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி, ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. கர்நாடக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் புகார் தொடர்பாக, சமூக ஆர்வலர் தினேஷ் கலாஹல்லி என்பவர் போலீஸில், அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி மீது புகார் அளித்தார். இந்தப் புகாரையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று அளித்த பேட்டியில் " அமைச்சர் ரமேஷ் மீதான புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சட்டம் உறுதியாகத் தனது கடமையைச் செய்யும். உண்மை நிலவரங்கள் ஏதும் தெரியாமல் ஒருவர் மீது அவதூறு பரப்பக்கூடாது.

இந்தப் புகாரில் தெளிவான ஆதாரங்கள் இல்லை, புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் நடத்தும் விசாரணையின் முடிவில் உண்மை தெரியும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.

இதையடுத்து, அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது " என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளன, விசாரணையில் இருக்கிறது. நான் நிரபராதி என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும் தார்மீக பொறுப்பு ஏற்று என்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த கடிதத்தை ஏற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாஜக தலைமையிடம் பிறப்பித்த உத்தரவின்படி ரமேஷ் ஜர்ஹிகோலி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக தேசிய பொதுச்செயலாளரும், கர்நாடக பொறுப்பாளருமான அருண் சிங் கூறுகையில் " 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் ஆகியவற்றை மனதில் வைத்து கட்சியின் முடிவு மாநிலத் தலைமையிடம் தெரிவிக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.

கர்நாடகாவில் வரும் வியாழக்கிழமை முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ளதையடுத்து, அமைச்சர் ஜர்கிஹோலி ராஜினாமா நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in