

இளைஞர் காங்கிரஸ், தேசிய மாணவர் காங்கிரஸ் பிரிவுக்கு உட்கட்சித் தேர்தல் நடக்கோரியதால், நான் என் சொந்தக் கட்சியினராலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேதனையுடன் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காணொலி மூலம் அமெரிக்க காமெல் பல்கலைக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் நேற்று பங்கேற்றார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி ஜனநாயகம் குறித்தும், தற்போது அதிருப்தி தலைவர்கள் 23 பேர் கட்சித் தலைமைக்கு எதிராகப் பேசிவருவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதில் அளித்துப் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று முதன்முதலாகக் குரல் கொடுத்தவன் நான்தான். காங்கிரஸ் இளைஞர் பிரிவுக்கும், மாணவர் பிரிவுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று நான் முதன்முதலாகக் கட்சிக்குள் வலியுறுத்தினேன்.
ஆனால், தேர்தல் நடத்தக்கூறியதால், சொந்தக் கட்சியில் உள்ளவர்களாலேயே வார்த்தைகளால் சிலுவையில் அறையப்பட்டேன். என் சொந்தக் கட்சியினராலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டேன்.
ஜனநாயகரீதியாக கட்சிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அது மிக அவசியமான ஒன்று என்று தெரிவித்தேன். ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தக் கேள்வி மற்ற கட்சியினரிடம் கேட்கப்படவில்லை. பாஜகவிடமோ, பகுஜன் சமாஜ் கட்சியிடமோ அல்லது சமாஜ்வாதிக் கட்சியிடமோ உட்கட்சி ஜனநாயகம் குறித்தும், உட்கட்சித் தேர்தல் குறித்தும் யாரும் ஏன் கேள்வி எழுப்புவதில்லை
காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் என்பது, அரசியலைப்புச் சட்டத்தின் அடிப்படையாகக் கொண்டது. எந்தக் கட்சியும் காங்கிரஸ் கொடுக்கும் முக்கியத்துவம் போல் கொடுக்கமாட்டார்கள், அதனால்தான் நாங்கள் ஜனநாயகரீதியாகவும், ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகிறது. காங்கிரஸ் கட்சியைப் பற்றி மட்டுமே கேள்வி எழுப்புவதற்குக் காரணமாக இதுதான் அமைந்துள்ளது
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமைக்கு எதிராகவும், உட்கட்சித் தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலைவர் சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் , கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 பேர் கடிதம் எழுதினர். அந்த கடித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய சலசலப்பு உருவாகியது. சமீபத்தில் அதிருப்தி தலைவர்கள் ஜம்மு காஷ்மீரில் கூடினர். அப்போது பேசிய குலாம் நபி ஆசாத், கபில் சிபல் ஆகியோர் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாகப் பலவீனமடைந்துவிட்டது என்று குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.