

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி மீதான பாலியல் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும், போலீஸார் புகார் மீது விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதியளித்துள்ளார்.
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் தினேஷ் கலாஹல்லி என்பவர் போலீஸில், அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி மீது புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், " கர்நாடக மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பெண்ணை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணை வெளியே சொல்லக்கூடாது என அமைச்சர் தரப்பில் மிரட்டல் விடுக்கப்படுகிறது. அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி மீது போலீஸார் பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால், இந்த பாலியல் குற்றச்சாட்டை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் கூறுகையில் " என் மீது புகார் அளித்த அந்த பெண்ணின் பெயர் கூட எனக்குத் தெரியாது. நான் சம்பந்தப்பட்டதாக வலம்வரும் வீடியோ குறித்து கட்சித் தலைமையிடம் விளக்கம் அளிக்கப்போகிறேன். நான் தற்போது மைசூருவில் இருக்கிறேன். அந்த வீடியோ குறித்தும், அந்தப் பெண் குறித்தும் ஏதும் தெரியாது. என் மீதான சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தீவிரமானது. இது நிரூபிக்கப்பட்டால், நான் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன், இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பாவிடமும் பேசினேன் " எனத் தெரிவித்தார்.
அமைச்சர் ரமேஷ் மீதான புகாரையடுத்து, அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில் " கர்நாடக அமைச்சர் ரமேஷ் தொடர்பான வீடியோ காட்சிகளின் உண்மைத் தன்மை ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் நடவடிக்கைஎடுக்கப்ப்டும். இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பாவிடமும், கட்சித் தலைவரிடமும் பேசியிருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறுகையில் " அமைச்சர் ரமேஷ் மீதான புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சட்டம் உறுதியாகத் தனது கடமையைச் செய்யும். உண்மை நிலவரங்கள் ஏதும் தெரியாமல் ஒருவர் மீது அவதூறு பரப்பக்கூடாது.
இந்தப் புகாரில் தெளிவான ஆதாரங்கள் இல்லை, புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் நடத்தும் விசாரணையின் முடிவில் உண்மை தெரியும்." எனத் தெரிவித்தார்.