Published : 03 Mar 2021 03:20 AM
Last Updated : 03 Mar 2021 03:20 AM

ஆண் - பெண் சேர்ந்து வாழும் போது ஒருமித்த உறவு கொள்வதை பலாத்காரமாக கருத முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி

‘‘பல ஆண்டுகளாக ஆண் - பெண் சேர்ந்து வாழும்போது ஒருமித்த உறவு வைத்துக் கொண்டதை பலாத்காரமாகக் கருத முடியாது’’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

‘கால் சென்டர்’ ஒன்றில் பணியாற்றும் இளைஞரும் இளம்பெண்ணும் 5 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தனர். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக அந்த இளைஞர் வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் அவருடன் சேர்ந்து வாழ்ந்த பெண் ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து, ‘‘திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதிகள் கூறி தன்னுடன் உறவு வைத்துக் கொண்டார், அது பலாத்காரம்தான். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று இளைஞருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர்இடம்பெற்றுள்ளனர். கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இளைஞர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விபா தத்தா மகிஜா வாதிடும்போது, ‘‘சேர்ந்து வாழும் போது இருவரும் ஒருமித்து உறவு வைத்துக் கொண்டதை பலாத்காரம் என்று கூறி, இளைஞரை கைது செய்ய உத்தரவிட்டால், அது அபாயகரமான முன்னுதாரணம் ஆகிவிடும்’’ என்றார்.

கோயிலில் திருமணம்

புகார் அளித்த இளம்பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆதித்யா வசிஷ்ட் வாதிடும்போது, ‘‘கணவன் - மனைவியாக வாழ்வதாக அந்த இளைஞர் நடந்து கொண்டுள்ளார். கோயிலிலும் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், உறுதிமொழியை காப்பாற்றாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி உள்ளார். அவரிடம் இருந்து பணம் பறித்துள்ளார்’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது:

பல ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழும் ஜோடி, ஒருமித்து உறவு வைத்துக் கொண்டதை பலாத்காரமாகக் கருத முடியாது. திருமணம் செய்வதாக ஆண் கூறியிருந்து, அதை நிறைவேற்றாமல் போனாலும் ஒன்றாக வாழ்ந்த காலத்தில் உறவு வைத்துக் கொண்டதை பலாத்காரமாகக் கூற முடியாது.

திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளிப்பது தவறு. ஒரு பெண்கூட திருமணம் செய்வதாக உறுதி அளித்துவிட்டு பின்னர் பிரிந்து செல்வது தவறு. அதேநேரத்தில் சேர்ந்து வாழும் ஜோடி, உறவு வைத்துக் கொண்டது பலாத்காரம் என்று வகைப்படுத்த முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

கைது செய்ய தடை

பலாத்கார குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை 8 வாரங்களுக்கு கைது செய்யக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது, பலாத்கார குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கிறார்களா என்று அறியும்படி இளைஞருக்கு உத்தரவிட்டனர். அத்துடன் அவர் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த 2 வழக்குகளில், ‘‘சேர்ந்து வாழும் போது இருவரும் ஒருமித்த கருத்துடன் உறவு கொள்வதை பலாத்காரம் என்று கூறுவது மிகவும் கடினம். பலாத்காரம் - ஒருமித்த உறவு ஆகிய இரண்டுக்கும் தெளிவான வேறுபாடு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x