Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 03:23 AM

காங்கிரஸ், இடதுசாரிகளை கைவிட்ட சமாஜ்வாதி, ஆர்ஜேடி

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகட்சிகளுக்கு சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆதரவு அளிக்கவில்லை. இருகட்சிகளும் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மேற்குவங்கத்தில் மார்ச் 27-ம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸும், பாஜகவும் நேருக்கு நேர் மோதுகின்றன. காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் சர்ச்சைக்குரிய பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. இதற்கு காங்கிரஸ் வட்டாரத்திலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணியில் அப்பாசுதீன் சித்திகி தலைமையிலான இந்திய மதச்சார்பற்றமுன்னணி இடம் பெற்றுள்ளது.இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, அப்பாசுதீன் சித்திகி வெளியிட்ட வீடியோவில், இந்த வைரஸால் 50 கோடி இந்தியர்கள் உயிரிழப்பார்கள் என்று சாபமிட்டார்.

இதுபோல பல்வேறு சர்ச் சைக்குரிய கருத்துகளை அப்பா சுதீன் சித்திகி வெளியிட்டு வருகிறார். அவரது கட்சியை கூட்டணியில் சேர்த்தது தவறு என்று ஆனந்த் சர்மா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இரு கட்சிகளும் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில், ஆர்ஜேடி,காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள்கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறும்போது, "பிஹாரில் மட்டுமே காங்கிரஸோடு கூட்டணி அமைத்தோம். மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை ஆதரிப்போம்" என்றார். கொல்கத்தாவில் நேற்று முன்தினம் முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து தனது ஆதரவை தேஜஸ்வி யாதவ் உறுதி செய்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள்கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்த கட்சியும் மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ளது. இதுகுறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட அறிக்கையில், "மேற்குவங்கத்தில் வாழும் உத்தரபிரதேச மக்கள் மம்தாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்குவங்கத்தில் பிஹார், உத்தர பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிப்பதால் சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி களின் நிலைப்பாடு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x