

காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாகச் சுயநலத்துடன் செயல்படுவதாகவும், பிரதமர் மோடியைப் புகழ்ந்ததாலும் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் உருவ பொம்மையை ஜம்முவில் எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு நகரில் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏந்திப் போராட்டம் நடத்திய ஏராளமான இளைஞர்கள், குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒருவருக்கு எதிராக முதல் முறையாக உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடந்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைமை தேவை, மாற்றம் தேவை எனக் கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோனியா காந்திக்கு மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள் கடிதம் எழுதினர்.
இந்தக் கடிதத்தால் காங்கிரஸ் தலைமை இந்தத் தலைவர்கள் மீது மிகுந்த அதிருப்தியுடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிருப்தியால்தான் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் பதவிக்காலம் முடிந்த பின்னும், அவருக்கு எம்.பி. பதவி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதிருப்தி தலைவர்கள் பெரும்பாலானோர் கடந்த வாரம் ஜம்முவில் குலாம் நபி ஆசாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுத் தலைமைக்குத் தங்கள் வலிமையை வெளிப்படுத்த விரும்பினர். அப்போது நடந்த கூட்டத்தில் குலாம் நபி ஆசாத், பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்தைப் பறித்த ஒரு பிரதமரை, ஜம்முவைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் புகழ்ந்து பேசியது காங்கிரஸ் கட்சியினருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் அதிருப்தி தலைவர்கள் தனியாகக் கூட்டம் நடத்தியது கட்சியைப் பலவீனமாக்குவதுடன், பாஜகவை மேலும் வலுவடைய வழி ஏற்படுத்தும் என்று தொண்டர்கள் கருதி இன்று குலாம் நபி ஆசாத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
மூத்த தலைவரும், மாவட்ட மேம்பாட்டுக் கவுன்சில் உறுப்பினரும், காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளருமான ஷான்வாஸ் சவுத்ரி தலைமையில், இந்தப் போராட்டம் ஜம்முவில் நடந்தது. காங்கிரஸ் கொடியை ஏந்திய ஏராளமான இளைஞர்கள், குலாம் நபி ஆசாத்தின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷங்களைத் தொண்டர்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
ஷான்வாஸ் சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில், "அனுபவமான மனிதர் என்பதால், காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆசாத்தை உயர்ந்த இடத்தில்தான் வைத்தது. ஆனால், ஜம்மு காஷ்மீருக்கு வந்து, பிரதமர் மோடியை குலாம் நபி ஆசாத் புகழ்ந்து பேசுகிறார். மாநிலத்தின் அந்தஸ்தைப் பறித்தவர் மோடி. பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படத் துணிந்துவிட்டார் ஆசாத் என்பது தெளிவாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தி, சுயநலத்துக்காகச் செயல்படுகிறார். குலாம் நபி ஆசாத்தைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிதான் குலாம் நபி ஆசாத்தை வளர்த்தது. மாநிலங்களை எம்.பி.யாகப் பலமுறை நியமித்தது, ஜம்மு காஷ்மீர் முதல்வராக்கியது.
காங்கிரஸ் கட்சி சிக்கலில் இருக்கும்போது அவர் தனது அனுபவத்தைப் பயன்படுத்தித் தீர்க்க வேண்டும். ஆனால், சில தலைவர்களுடன் ஜம்மு காஷ்மீர் வந்து பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசி, சுயநலத்துடன் நடக்கிறார்" எனத் தெரிவித்தார்.