Last Updated : 02 Mar, 2021 05:42 PM

 

Published : 02 Mar 2021 05:42 PM
Last Updated : 02 Mar 2021 05:42 PM

காங்கிரஸால் தண்டிக்கப்படுவது வேதனையாக இருக்கிறது: குலாம் நபி ஆசாத்துக்காக வேதனைப்படும் பாஜக

குலாம் நபி ஆசாத் போன்ற தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் தண்டிக்கப்படுவது, விமர்சிக்கப்படுவது வேதனையாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் நோக்கம் அனைத்துமே சோனியா காந்தியின் குடும்பத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதுதான். பிரதமர் மோடியின் சரியான திட்டங்களுக்கு ஆதரவாகப் பேசினால் தண்டிக்கப்படுவார்கள் என்று பாஜக தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைமை தேவை, மாற்றம் தேவை எனக் கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோனியா காந்திக்கு மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி உள்ளிட்ட 23 தலைவர்கள் கடிதம் எழுதினர்.

இந்தக் கடிதத்தால் காங்கிரஸ் தலைமை இந்தத் தலைவர்கள் மீது மிகுந்த அதிருப்தியுடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிருப்தியால்தான் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் பதவிக்காலம் முடிந்த பின்னும், அவருக்கு எம்.பி. பதவி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதிருப்தி தலைவர்கள் பெரும்பாலானோர் கடந்த வாரம் ஜம்முவில் குலாம் நபி ஆசாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அதன்பின் நடந்த நிகழ்ச்சியில், குலாம் நபி ஆசாத், பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசினார். அவர் பேசுகையில், "பிரதமர் மோடி தனது அடையாளத்தை, சுயத்தை மறைக்காதவர். தான் தேநீர் விற்பனை செய்தேன் என்பதை வெளிப்படையாகக் கூறத் தயங்காதவர் பிரதமர் மோடி" எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி, இந்திய மதச்சார்பற்ற முன்னணி எனும் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு விரோதமாக இந்தக் கூட்டணி அமைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''காங்கிரஸ் கட்சிக்குள் ஏராளமான உட்கட்சிப் பிரச்சினைகள் உள்ளன. அதுபற்றி நான் பேசவில்லை. ஆனால், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட சில மூத்த தலைவர்களை தண்டிப்பது வேதனையாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கட்சிக்குள் யார் ஜனநாயகத்தை விரும்புகிறார்களோ, கட்சித் தலைவர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று கூறுகிறார்களோ, பிரதமர் மோடியின் சரியான திட்டங்களைப் புகழ்ந்தோ அல்லது சார்ந்தோ பேசுகிறார்களோ அவர்களை அந்தக் கட்சி தண்டிக்கும்.

காங்கிரஸ் கட்சி என்பது 4 பேரை மட்டும்தான் தற்போது குறிக்கிறது. சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி வத்ரா, அவரின் கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர்தான்.

காங்கிரஸ் கட்சியின் ஒரே திட்டமே மோடியை வெறுக்க வேண்டும் என்பதுதான். மோடியைப் புகழ்ந்து பேசிவிட்டார் என்பதற்காக காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத்துக்கு எதிராக அந்தக் கட்சியின் தொண்டர்கள் சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்துகிறார்கள். அவரின் உருவ பொம்மையை எரிக்கிறார்கள். இதுதான் அந்த வெறுப்பு.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கும் பேச்சுக்கும் தொடர்பில்லை. பல்வேறு மாநிலங்களில் முரண்பட்ட கூட்டணி வைக்கிறது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களுடனும், மவுலானா கட்சியுடனும் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்திக்கும் காங்கிரஸ் கட்சி, கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் கடுமையாக எதிர்க்கிறது. சோனியா காந்தி குடும்பத்தின் தொடர்பைப் பராமரிக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைகிறது.

மேற்கு அசாம் மாநிலத்தில் ஏஐடியுஎப் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குச் சித்தாந்தங்களே இல்லை. ஊழல், தகுதியில்லாதவர்களுக்கும், தேவைப்பட்டவர்களுக்கும் பதவி வழங்குவது, எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் நோக்கம்''.

இவ்வாறு பத்ரா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x