

இஸ்லாமிய அமைப்பான இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது தவறானது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கையான மதர்சார்பின்மைக்கு எதிரானது என அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 3-வது முறையாக ஆட்சியைக் பிடிக்க திரிணமூல் காங்கிரஸ் போராடி வருகிறது. முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக காய்களை நகர்த்தி வருகிறது.
மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பிஹார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட முயன்று வருகிறது.
இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில் மேற்குவங்க மாநிலத்தில் மிக முக்கிய முஸ்லிம் அமைப்பின் தலைவரான அப்பாஸ் சிக்திக் தான் உருவாக்கியுள்ள இந்திய மதச்சார்பற்ற முன்னணி காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணியுடன் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்கள் கணிசமாக வசிக்கும் 30 தொகுதிகளில் போட்டியிட அப்பாஸ் சித்திக் திட்டமிட்டுள்ளார். மூன்று கட்சிகளும் இணைந்து பிப்ரவரி 28-ம் தேதி பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆனால் முஸ்லிம் கட்சியான இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடன் காங்கிரஸ் போட்டியிடும் விவகாரம் அக்கட்சியில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது:
மேற்குவங்கத்தில் இஸ்லாமிய அமைப்பான இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது தவறானது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கையான மதர்சார்பின்மைக்கு எதிரானது. காந்தி - நேரு வகுத்து கொடுத்த கொள்கையான மதர்சார்பின்மை என்பது காங்கிரஸின் ஆன்மா போன்றது. இதுபோன்ற விஷயம் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவில்லை. இடதுசாரி கட்சிக்கு மட்டுமே காங்கிரஸ் தொகுதி ஒதுக்கியது. ஆனால் அதில் இருந்து அப்பாஸ் சித்திக் கட்சிக்கு இடதுசாரி கட்சிகள் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
உங்கள் கருத்து பாஜகவின் மதவாத கொள்கைக்கே வலு சேர்க்கும். மம்தா பானர்ஜியின் ஏதேச்சதிகாரத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதைபோல பாஜகவின் மதவாதத்தையும் முறியடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே மதவாதத்திற்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்க வேண்டாம்’’ எனக் கூறியுள்ளார்.