மோசமான பணமதிப்பு நீக்க முடிவால் வேலையின்மை அதிகரித்துள்ளது: மத்திய அரசு மீது மன்மோகன் சிங் சாடல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் : கோப்புப்படம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் : கோப்புப்படம்
Updated on
1 min read

2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மோசமான பணமதிப்ப நீக்க முடிவால், நாட்டில் வேலையின்மை அதிகரித்து அமைப்புச் சாரா துறையே சீர்குலைந்துள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அரசை கடுமையாகச் சாடினார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி இன்ஸ்டியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் சார்பில், பிரதீக்ஸா 2030 என்ற தலைப்பில் பொருளாதாரக் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கின் நோக்கம், கேரள மாநிலத்தை வளப்படுத்துவதற்கான ஆலோசனை வழங்கி, முன்னெடுத்துச் செல்வதாகும்.

காணொலி வாயிலாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசியதாவது:

பொருளாதாரத்தை சீரமைக்க அரசு எடுத்த தற்காலிகமான நடவடிக்கைகளைத்தான் எடுத்துள்ளது. சிறு, மற்றும் நடுத்தரத் துறைகளுக்கு கடன் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அமைப்பு சாரா துறையில் வேலையின்மை மிகவும் உயர்ந்த அளவில் அதிகரித்து அந்த துறையையே சீரழித்துவிட்டது. இதற்கு காரணம், கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு எடுத்த மோசமான பணமதிப்பு நீக்க நடவடிக்கைதான்.

கேரளா மற்றும் பல்வேறு மாநில அரசு நிதிப்பற்றாக்குறை காரணமாக அதிகமாகக் கடன் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அவற்றின் நிதிநிலைமையே மோசமடைந்துவிட்டன. எதிர்கால பட்ஜெட்டுக்கு தேவையான நிதியை ஒதுக்க முடியாமல் பெரிய கடன் சுமையில் இருக்கின்றன .

அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அரசியல் கொள்கை மற்றும் இந்தியப் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு மூலக்கல்லாக இருப்பது கூட்டாட்சியும், மாநில அரசுகளுடன் தொடர் ஆலோசனையும்தான்.ஆனால், தற்போது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசில் இந்த அம்சங்களை நான் காணவில்லை.

கேரளாவில் சமூக வாழ்க்கைத் தரம் உயர்ந்தது, மற்ற துறைகளுக்கும் அதிகமான முக்கியத்துவம் வழங்குவது அவசியம். ஏராளமான தடைகள் மாநிலத்துக்கு இருந்தது, அந்த தடைகளை கேரள மாநிலம் கடந்துவிட்டது. கடந்த 2 அல்லது ஆண்டுகளாக உலகளவில் பொருளாதராத்தில் பெரும் மந்தநிலை நிலவுகிறது. இதில் கேரள மாநிலமும் பாதிக்கப்பட்டது.

இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in