

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரள மாநிலம் முழுவதும் பஸ், லாரிகள், ஆட்டோக்கள் ஓடவில்லை, முழு அடைப்புப் போராட்டமும் நடந்து வருவதையடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசுப் போக்குவரத்தும் பங்கேற்றதால், அரசுப் பேருந்துகள் ஓடாததால், சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.
ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள், தனியார் பேருந்துகளும் ஓடாததால் மக்கள் பேருந்து நிறுத்தங்களில் நீண்ட நேரமாகக் காத்துக் கிடந்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் உள்ள வர்த்தகர்கள் கூட்டமைப்பான சம்யுக்தா சமரா சமிதி இன்று முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்தப் போராட்டத்தில் லாரிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களும் பங்கேற்றுள்ளனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவும் இருப்பதால், சாலையில் இருசக்கர வாகனங்கள்கூட பெரும்பாலும் இயங்கவில்லை என்பதால், சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல முடியாமல் பேருந்து நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் காத்திருக்கின்றனர். கேரள மாநிலத்தில் இன்று நடக்க இருந்த தேர்வுகளும் வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. 12 மணி நேர கடையடைப்புப் போராட்டத்தால், அப்துல் கலாம் பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடக்க இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
ஆனால், இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாஜக ஆதரவு பெற்ற பாரதிய மஸ்தூர் சங்கம் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், காங்கிரஸின் ஐஎன்டியுசி, சிஐடியு ஆகியவை ஆதரவு அளித்துள்ளதால், அந்தச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பேருந்துகளையும், ஆட்டோக்களையும் இயக்கவில்லை.
பால், நாளேடுகள், ஆம்புலன்ஸ், திருமணத்துக்குச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் இந்த ஸ்ட்ரைக்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.