Last Updated : 16 Nov, 2015 10:56 AM

 

Published : 16 Nov 2015 10:56 AM
Last Updated : 16 Nov 2015 10:56 AM

மோடியின் பிரச்சாரம், நிதி அறிவிப்பு எல்லாம் தேர்தல் மாயாஜாலம் என்பதை பிஹார் மக்கள் புரிந்துகொண்டனர்: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா மீண்டும் புகார்

‘‘பிஹாரில் பிரதமர் மோடியின் பிரச்சாரம், நிதி அறிவிப்பு எல்லாம் தேர்தல் மாயாஜாலம் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். அதனால்தான் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டது’’ என்று அக்கட்சி எம்.பி. சத்ருகன் சின்ஹா சரமாரியாக குற்றம் சாட்டினார்.

பிஹார் மாநிலத்தின் பாட்னா சாகிப் தொகுதி பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா. பிஹாரில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் இவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். இத்தேர்தலில் பாஜக 53 இடங்களை மட்டுமே பெற்றது. அதற்கு பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடிதான் காரணம் என்று ஏற்கெனவே பகிரங்கமாக குற்றம் சாட்டினார் சத்ருகன். இந்நிலையில், மீண்டும் மோடி மீது அவர் சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளார்.

நாக்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்ருகன் கூறியதாவது:

பிஹார் தேர்தலில் 53 இடங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடியின் பிரச்சாரம்தான் காரணம். அதை மறுப்பதற்கு இல்லை. அதேசமயம், பிரச்சாரத்தில் லாலு மீது மோடி நடத்திய தாக்குதல்கள் எல்லாம் பாஜக.வை திருப்பி தாக்கி விட்டது. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பிஹார் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் என்று மோடி கூறியது வெறும் தேர்தல் மாயாஜாலம் என்பதை மக்கள் புரிந்து கெண்டனர்.

பிஹாரில் உண்மை நிலவரம் என்ன என்பதை மோடியிடம் பாஜக தலைவர்கள் மறைத்து விட்டனர். பிஹார் மாநிலத்தை சேராதவர்களுக்கு தேர்தலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், பிஹாரில் லட்சக் கணக்கான ஓட்டுகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்ற என்னை பிரச்சாரத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் மக்கள் வெறுப்பில் பாஜக.வை தோற்கடித்து விட்டனர்.

மேலும், முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிரான அலை எதுவும் பிஹாரில் இல்லை. அத்துடன் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் நிதிஷ் குமார் கூட்டணி வைத்த போதே, தேர்தலில் பாதி வெற்றி அவர்களுக்கு கிடைத்து விட்டது. காட்டு தர்பார், காட்டு தர்பார் என்று மீண்டும் மீண்டும் லாலுவை தாக்கி மோடி பேசியது, பாஜக.வுக்கு எதிராகவே போய்விட்டது. தேர்தலில் லாலு கட்சி 80 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாகிவிட்டது.

பிஹாரில் யாதவர்கள், முஸ்லிம்கள், குர்மிஸ் இனத்தவர் கள், காங்கிரஸ் ஆதரவாளர்களின் ஓட்டுகள் மட்டுமே 40 சதவீதம். இதை பாஜக தேர்தல் பிரச்சார பொறுப்பில் இருந்தவர்கள் புரிந்து கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிதிஷ் குமாரை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க கூடாது.

இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறினார்.

நிதிஷ் பதவியேற்பு விழாவில் பங்கேற்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘எனக்கு விடுக்கப்படும் அழைப்பின் தன்மை, அன்றைய தினம் எனக்குள்ள வேலைகளை பொறுத்துதான் அதில் பங்கேற்பது குறித்து முடிவெடுப்பேன்’’ என்று சத்ருகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x