பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு குறித்து மத்திய அரசு தீவிர பரிசீலனை?

பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு குறித்து மத்திய அரசு தீவிர பரிசீலனை?
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 10 மதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இது நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர், நாட்டில் பெட்ரோல்,டீசல் மீதான வரி இருமுறை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும், மார்ச் மத்தியில் இது தொடர்பாக முக்கிய முடிவு எட்டப்படும் எனவும் தெரிகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் போக்கைக் கண்காணித்து பெட்ரோல், டீசல் மீதான் கலால் வரி குறைப்பு முடிவு செய்யப்படவிருக்கிறது.

தற்போதைய நிலவரப்பட்டி சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய, மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலேயே ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100ஐ கடந்துள்ளது. சென்னையில், இன்று பெட்ரோல், லிட்டர் ரூ.93.11, டீசல் லிட்டர் ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில்தான், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறிப்பு குறித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கின்றன. அரசு கையில் ஒன்றும் இல்லை.கடந்த நவம்பர் மாதம் முதல் உலகளவில் எண்ணெய் விலை ஏறிக்கொண் டிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்க வேண்டுமென்றால், மத்திய அரசு வரியை குறைப்பது மட்டும் தீர்வாகாது. மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றாக அமர்ந்து இதுகுறித்து பேச வேண்டும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான சாத்தியங்களை ஜிஎஸ்டி கவுன்சில் ஆராயும்" என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in