Published : 02 Mar 2021 03:12 AM
Last Updated : 02 Mar 2021 03:12 AM

கடந்த ஆண்டு மும்பையில் மின்சாரத்தை துண்டித்தது அம்பலம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களை குறிவைத்து தாக்க சீன ஹேக்கர்கள் முயற்சி

புதுடெல்லி

சீனாவும் இந்தியாவும் கரோனா தடுப்பு மருந்துகளை பல நாடுகளுக்கு இலவசமாக வழங்குவதுடன் விற்பனை செய்தும் வருகின்றன. எனினும், உலகில் விற்பனையாகும் தடுப்பு மருந்தில் 60 சதவீதம் இந்திய தயாரிப்பு ஆகும்.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஏபிடி10 என்ற ஸ்டோன் பாண்டா இணையதள ஊடுருவல் நிறுவனம், சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களின் கணினிகளில் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த தகவலை சிங்கப்பூர், டோக்கியோவைச் சேர்ந்த, கோல்ட்மேன் சாக்ஸ் ஆதரவு பெற்ற சைபர்மா தெரிவித்துள்ளது.

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் கடந்த ஆண்டுஅக்டோபர் 12-ம் தேதி திடீரெனமின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சார ரயில்கள், போக்குவரத்து சிக்னல்கள், மருத்துவமனைகள், பங்குச் சந்தைகள் முடங்கின. சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு மின் விநியோகம் சீரடைந்தது. இதில் சதி இருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்தப் படும் என்றும் மகாராஷ்டிர மின் துறை அமைச்சர் நிதின் ரவுத் கூறியிருந்தார்.

இந்நிலையில், சீன அரசின் ஆதரவு பெற்ற இணையதள ஊடுருவல்காரர்கள், பெரும்பாலும் மின் உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட 12 முக்கிய இந்திய அரசு நிறுவனங்களின் கணினிகளில் வைரஸ்களை புகுத்த கடந்த ஆண்டு முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் இணையதள பாது காப்பு புலனாய்வு நிறுவனமான ‘ரெக்கார்டடு பியூச்சர்’ நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி, 5 முதன்மை மண்டல மின் விநியோக மையங்கள், 2 துறைமுகங்கள் ஆகியவை ‘ரெட் ஈகோ’ என்ற ஊடுருவல் நிறுவனத்தின் இலக்குக்கு உள்ளானவற்றில் முக்கிய நிறுவனங்கள் ஆகும். இந்தியாவின் மின் உற்பத்தி மற்றும் விநியோக உள்கட்டமைப்பு நிறுவனங்களின் கணினிகள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த சதி வேலையில் ஈடுபட்ட ஊடுருவல்காரர்கள், சீன பாதுகாப்பு அமைச்சகம் அல்லது அந்நாட்டின் முக்கிய உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு, சீன ராணுவம் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அதேநேரம், பாதிப்புக்குள்ளான நிறுவனங்களின் கணினிகளில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் களுக்கும் சீன ஊடுருவல் நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், ரெட் ஈகோ இணையவழி ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு கூடுதல் ஆதாரம் ஆகும். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x