Published : 02 Mar 2021 03:12 AM
Last Updated : 02 Mar 2021 03:12 AM

2-ம் கட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒரு கோடிக்கும் அதிகமானோர் பெயர் பதிவு

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பூசியைச் செலுத்தும் இரண்டாம் கட்டப் பணிகள் நேற்று தொடங்கின. கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்காக தங்களது பெயர்களை ஏராளமானோர் பதிவு செய்தனர். படம்: ஏஎப்பி

புதுடெல்லி

கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள நேற்று ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த ஜனவரி முதல் கோவேக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செலுத்த உத்தரவிட்டது. அதன்படி முதல் கட்டமாக சுகாதாரத்துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர் களுக்கு தடுப்பூசி முதல் கட்டமாக செலுத்தப்பட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் 2-ம் கட்ட தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. முதல் நாளில் பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் தலைவர்கள் நேற்று காலை தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனிடையே 2-ம் கட்டத்தில் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள நேற்று ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களது பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

இரண்டாம் கட்ட பணியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசால் அறிவிக்ககப்பட்டுள்ளது.

கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு மற்றும் முன்பதிவுகள் கோவின் இணையதளம் மற்றும் ஆரோக்யசேது செல்போன் செயலி மூலம் செய்யப்படுகின்றன. நேற்று மட்டும் பகல் 1 மணி நிலவரப்படி ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். எங்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது, மருத்துவமனைகள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 1.1 கோடி மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 16,752 பேர் புதிதாக வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டத்தில் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. முதல் கட்டத்தில் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசியை செலுத்த அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் இதுவரை 1.43 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,11,12,241 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,57,157 பேர் உயிரிழந்தனர். இதில் 1,68,627 பேர் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களது குடும்பத் தார் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x